பஸ்சில் சிறுமி கற்பழிப்பு வழக்கு: கைதான 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை


பஸ்சில் சிறுமி கற்பழிப்பு வழக்கு: கைதான 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை
x
தினத்தந்தி 11 Jun 2017 3:45 AM IST (Updated: 11 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே பஸ்சில் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதான 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஓமலூர்,

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, ஓமலூர் அருகே பஸ்சில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர்கள் மணிவண்ணன், முருகன், கண்டக்டர் பெருமாள் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுக்கு சிறுமியை அறிமுகப்படுத்திய இன்னொரு தனியார் பஸ் டிரைவர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பஸ்சை போலீசார் நேற்று முன்தினம் சேலம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும், சிறுமியின் ஆடை மற்றும் கற்பழிப்பு செய்த 3 பேரின் ஆடைகளும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை கற்பழித்த 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சேலம் மகளிர் கோர்ட்டில் ஓமலூர் மகளிர் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதற்கான அனுமதியை ஓமலூர் மகளிர் போலீசாருக்கு நீதிபதி விஜயகுமாரி வழங்கினார்.

3 பேருக்கு ஆண்மை பரிசோதனை


இந்தநிலையில், தனியார் பஸ் டிரைவர்கள் மணிவண்ணன், முருகன், கண்டக்டர் பெருமாள் ஆகியோருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதேசமயம், சிறுமி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் உறுப்பினர் திலகவதி சென்னையில் இருந்து சேலம் வந்து சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டார். அவருடன் சேலம் மாவட்ட குழந்தைகள் நலகுழும தலைவர் சேவியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரண்யா ஆகியோரும் சென்றனர்.

பின்னர் அவர்கள், சேலம் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் நடந்த கொடுமைகள் குறித்து கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது. நேற்று 2–வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடமும் குழந்தைகள் உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரூ.4.12 லட்சம் நிதியுதவி


இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சார்பில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் நிதியுதவியை மாவட்ட கலெக்டர் சம்பத், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் திலகவதி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரண்யா ஆகியோர் வழங்கினர்.


Next Story