ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிய பெண்ணிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் மோசடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு


ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிய பெண்ணிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் மோசடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2017 4:00 AM IST (Updated: 11 Jun 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிய பாந்திரா பெண்ணிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிய பாந்திரா பெண்ணிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வெளிநாட்டு மாப்பிள்ளை

மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்த 34 வயது பெண், ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிவந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு சன்னி(வயது40) என்பவர் அறிமுகம் ஆனார். சன்னி தான் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்றும், டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றுவதாகவும் கூறினார். மேலும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி கொண்டனர். இந்தநிலையில் சன்னி தனது உடல்நிலை சரியில்லாததால் இங்கிலாந்திற்கு செல்ல இருப்பதாக கூறினார். மேலும் திரும்பி வரும் வரை தனது நண்பர் ஸ்டிவ் தொடர்பில் இருப்பார் என அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

ரூ.4½ லட்சம் அனுப்பினார்

இந்தநிலையில் அந்த பெண்ணிற்கு ஸ்டிவ் போன் செய்தார். அவர், சன்னி தாயரை அழைத்து கொண்டு இந்தியா வர உள்ளார். அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அறை பதிவு செய்ய பணம் வேண்டும் என்றார். இதை நம்பிய பெண், அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.61 ஆயிரத்தை அனுப்பினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அப்போது பேசிய ஒருவர், மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.

சன்னி அதிகளவு இங்கிலாந்து நாட்டு பணத்துடன் விமான நிலையம் வந்துள்ளார். அவரை விடுவிக்க ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் வேண்டும் என கூறினார். இதையடுத்து அந்த பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை அனுப்பி வைத்தார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு போன் செய்த ஸ்டிவ் சன்னியை விடுவிக்க மேலும் ரூ.9 லட்சம் வேண்டும் என கூறினார். இதனால் சந்தேகமடைந்த பெண், சன்னியை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், இது குறித்து பாந்திரா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை நுதன முறையில் ஏமாற்றியவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story