புதுவையில் துணிகரம்: 4 சாராயக்கடைகளில் கொள்ளை; 8 பேர் கைது
புதுவையில் 4 சாராயக்கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
கடலூர் மாவட்டம் புதுக் கடையைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது42). புதுவை கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள சாராயக்கடையில் இவரும், பாபு என்பவரும் ஊழியர் களாக பணியாற்றி வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையிலேயே தங்கினர்.
நள்ளிரவில் அங்கு வந்த 4 பேர் சாராயம் கேட்டனர். அதற்கு தங்கராசுவும், பாபுவும் விற்பனை முடிந்துவிட்டது என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் திடீரென கத்திகளை எடுத்து தங்கராசு, பாபு ஆகியோரின் கழுத்தில் வைத்து மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.3,400 பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு, கடை வாசலில் மோட்டார் சைக்கிள்களுடன் தயாராக இருந்த அவர்களுடைய கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றுவிட்டனர்.
மேலும் 3 கடைகளில் கைவரிசை
இது தொடர்பாக தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மர்ம ஆசாமிகள் அபிஷேகப்பாக்கம், உறுவையாறு, ஆரியப்பாளைம் ஆகிய பகுதிகளில் உள்ள சாராயக்கடைகளிலும் கத்தியைக் காட்டி மிரட்டி மொத்தம் 37,016 ரூபாய் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில் மதகடிப்பட்டு பகுதியில் திருபுவனை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றனர். உடனே போலீசார் அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றனர்.
நல்லுார் ரயில்வே கேட் அருகே, தப்பிச் சென்ற ஒரு நபரின் சட்டைப் பையில் இருந்து செல்போன் ஒன்று கீழே விழுந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணையும் குறித்தனர்.
மோட்டார் சைக்கிள் மூலம் சிக்கினர்
விசாரணையில் அந்த செல்போன் ஆரியப்பாளையம் சாராயக்கடையில் ஒருவரிடம் இருந்து பறித்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் அது லாஸ்பேட்டை கங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பரணிதரன் (எ) பரணி (23) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் பரணிதரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், பரணிதரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கரிக்கலாம்பாக்கம் அபிஷேகப்பாக்கம், உறுவையாறு, ஆரியப்பாளையம் சாராயக்கடைகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அதையடுத்து பரணி தரனை போலீசார் கைது செய்தனர்.
உல்லாச சுற்றுலா
அவர் அளித்த தகவலின் பேரில் நோணாங்குப்பம் பிள்ளையார் கோவில் தெரு வர்மா என்ற மேகவர்மன் (24), விழுப்புரம் மாவட்டம் நாவற்குளம் உதயா என்ற உதயராஜ் (25), புதுவை கோவிந்தசாலை ஜெய் என்ற ஜெயக்குமார் (23), கடலுார் மாவட்டம் பெரிய இருசாம்பாளையம் சரவணன் (25), அரியாங்குப்பம் மாஞ்சாலை பெருமாள் வீதி விவேக் என்றவைத்தியநாதன் (27), புதுவை சுப்ராயப்பிள்ளை சத்திரம் கென்னடி நகர் நாகராஜ் (23), முருங்கப்பாக்கம் சுனில் என்ற சுனில் குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சுனில்குமார் தூண்டுதலின்பேரில் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாசமாக ஒக்கேனக்கலுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், 3 கத்திகள் ஆகியவற்றையும், ரூ.4,800 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story