மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ள ஒரே மாநிலம் புதுச்சேரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு


மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ள ஒரே மாநிலம் புதுச்சேரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு
x
தினத்தந்தி 11 Jun 2017 5:13 AM IST (Updated: 11 Jun 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ள ஒரே மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மோடி அரசில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் என்ன செய்துள்ளோம்? என்பதை துணிச்சலுடன் சொல்ல ஒரு அரசு முன்வந்து இருக்கிறது என்றால் அது பா.ஜனதா அரசாகத்தான் இருக்கும். அதுபோன்று மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என்ன செய்து இருக்கிறது? என்பதை துணிச்சலுடன் சொல்ல முன்வந்துள்ளது. பிரதமர் மோடியால் அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டிலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள ஒரே மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது. இதற்காக இந்த மாநில மக்களுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பென்சன் திட்டம்

ஒரு காலத்தில் வங்கிகளில் கணக்கு தொடங்குவது என்பது சுலபமான காரியம் அல்ல. 125 கோடி மக்கள் உள்ள நமது நாட்டில் வெறும் 4 கோடி மக்கள் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தனர். நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 29 கோடியாக உயர்ந்தது.

ஓ.என்.ஜி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு பென்சன் கிடைக்கும். ஆனால் தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு அப்படி எதுவும் கிடைக்காது. சாதாரண மக்கள் 60 வயதுக்கு பிறகு யாரையும் கெஞ்சக்கூடாது என்பதற்காக ‘அடல் பென்சன் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மாதந்தோறும் பென்சன் தொகை பெற முடியும்.

செல்வமகள் திட்டம்

முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் வேண்டாததாக கருதினார்கள். ஆனால் மோடி அரசில் பெண் குழந்தை பிறந்தால் அதை செல்வலட்சுமியாக கருத முடியும். மோடி ஆட்சியில் ஒரு பெண் குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் செல்வமகள் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சேர்த்துக் கொண்டு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும்போது நீங்கள் செலுத்திய தொகையில் பாதியை அந்த குழந்தையின் உயர்கல்வி செலவுக்காக பெற முடியும். திருமண வயது வரும்போது கட்டிய பணத்துடன், அரசின் உதவியும் சேர்த்து குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

நாட்டில் உள்ள சுமார் 5 கோடி ஏழை எளிய மக்களுக்கு ரூ.1600 மதிப்புள்ள இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்யும்போது அந்த வீட்டிலிருந்து வெளியாகும் புகை சுமார் 400 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமாகும். அந்த புகையை சுவாசிக்கும் தாய்மார்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்படுவதை உணர்ந்த பிரதமர் மோடி தாய்மார்கள் நல்ல உடல்நலத்துடன் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இலவச சமையல் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தார்.

பாமர மக்களும் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக முத்ரா கடனுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதுபோன்று ஏராளமான திட்டங்களை அவர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக முன்னேற்றப் பணிகள் குறித்த படக்காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது.

இந்தநிகழ்ச்சிக்கு அந்த நிறுவன (காவேரி படுகை) செயல் இயக்குநர் குல்பீர்சிங் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சி யிலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பொது மேலாளர்கள் ராஜேந்திரன், நடராஜன், பொறியியல்துறை தலைவர் குருராஜன், புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன், தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story