அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் தலையிடுகிறார் டெல்லியில் ஜனாதிபதியிடம், நாராயணசாமி புகார்
அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக கிரண்பெடி குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் புகார் தெரிவித்து இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் உடனிருந்தார். சுகாதாரத்துறை செயலாளர் மிஸ்ராவையும் நாராயணசாமி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
நான் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் சந்தித்து பேசினேன். அப்போது கவர்னர் கிரண்பெடி அதிகார வரம்பினை மீறி செயல்படுகிறார். அரசின் அன்றாட நிகழ்வுகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார் என்று தெரிவித்துள்ளேன். மேலும், புதுவையில் சென்டாக் மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை வெளிப் படையாக நடத்தி உள்ளோம். இந்த நிலையில் அரசின் மீது கவர்னர் கிரண்பெடி அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்றும் கூறியுள்ளேன்.
சுகாதாரத்துறை மந்திரி
அதுமட்டுமில்லாமல் சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது சென்டாக் கலந்தாய்வினை வெளிப்படையாக நடத்தியது குறித்து எடுத்து கூறினேன். அவரும், மத்திய அரசின் விதிப்படி கலந்தாய்வு நடத்தி உள்ளர்கள் என்று தெரிவித்தார். மேலும் எங்கள் கட்சியின் (காங்கிரஸ்) பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்கையும் சந்தித்து பேசினேன். அவரிடமும் கிரண்பெடியின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்துள்ளேன். இன்று (ஞாயிறுக்கிழமை) உள்துறை மந்திரி, நிதித்துறை மந்திரிகளை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story