19. கண்டெடுக்கப்பட்டவர்


19. கண்டெடுக்கப்பட்டவர்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:49 PM IST (Updated: 11 Jun 2017 4:48 PM IST)
t-max-icont-min-icon

அரிய வகையில் பழத்தைக் கண்டெடுத்தால் வியப்பு, பார்த்திராத மலரைக் கண்டெடுத்தால் மகிழ்ச்சி, பறவையைக் கண்டெடுத்தால் ஆராய்ச்சி, முத்தைக் கண்டெடுத்தால் சாதனை, காசைக் கண்டெடுத்தால் பரவசம்.

ரிய வகையில் பழத்தைக் கண்டெடுத்தால் வியப்பு, பார்த்திராத மலரைக் கண்டெடுத்தால் மகிழ்ச்சி, பறவையைக் கண்டெடுத்தால் ஆராய்ச்சி, முத்தைக் கண்டெடுத்தால் சாதனை, காசைக் கண்டெடுத்தால் பரவசம்.

ஆனால் வீதியில் ஆதரவற்ற குழந்தையைக் கண்டெடுத்தால் மனதில் கனத்துத் தொங்கும் துயரம்.

‘பெற்றோராக இருப்பது இனிய பொறுப்பு’ என்று பிரான்சிஸ் பேகன் குறிப்பிடுகிறார்.

உடலின் கணநேர இன்பம் தருகிற அழியாத இன்பம் குழந்தைகள். சிற்றின்பம் தருகிற பேரின்பமாக அவர்கள் இருக்கிறார்கள்.

பெறுவதால் மட்டும் பெற்றோர் ஆக முடியாது. குழந்தையைத் தருவதால் மட்டும் தாயாகிவிட முடியாது. அதற்கு அன்னத்தோடு அன்பையும் ஊட்ட வேண்டும். பாலுடன் பாசத்தையும் புகட்ட வேண்டும். அதன் தளிர் நடையைப் பார்த்துப் பூரிக்க வேண்டும். மழலையைக் கேட்டு மகிழ வேண்டும்.

அக்குழந்தையின் வயிறு நிறைவதில் தன் வயிறு காலியாக இருப்பதை மறந்து போகிறவள் தாய். அக் குழந்தை அடிபடுகிறபோது அதற்குப் பதிலாக ரத்தம் சிந்த சித்தமாயிருப்பவள் தாய். தாய்மை, வளர்ப்பதால் புனிதமாகிறது, பாதுகாப்பதால் பவித்திரமாகிறது.

சிலர் சிற்றின்பமே முக்கியம் என்று பேரின்பத்தைத் தவற விடுகிறார்கள். அனாதைக்குழந்தைகள் சிலர் காலத்தால் கைவிடப்பட்டவர்கள். பெற்றோர் இருவரும் பலியாக, பிடிக்க சுண்டுவிரல் இல்லாமல் பரபரப்பு உலகத்தில் வழிதவறி பரிதவிப்பவர்கள். சிலர் முறைதவறிய காமத்தின் முத்திரைகள். ஊருக்குப் பயந்து ஆன்மாவை விற்கும் அபாக்கியசாலிகளால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

இந்த அநாமதேயக் கடிதங்கள், போய்ச்சேருகிற முகவரியும் இல்லாமல் அலைக்கழிபவை. இந்த மழைத்துளிகளின் தன்மையை சேர்கிற இடமே தீர்மானிக்கிறது. இவை பெரும்பாலும் சகதியில் விழுந்து அவதிக்குள்ளாகின்றன. கவலை உள்ளவர்களிடம் சேர்ந்து அபலையாகின்றன. அரிதாக ஆற்றில் விழுந்து நன்னீராகின்றன.

இன்னும் உலகத்தில் ஈர இதயங்கள் இருக்கவே செய்கின்றன. ஆதரவின்றி அலறும் குழந்தைகளை அரவணைக்க அன்புக் கைகளுடன் அள்ளி அணைப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏழை கண்டெடுத்த புதையலைப்போல அவர்களை ஏந்தி உச்சி முகரும் உள்ளங்களின் கடைக்கண் வெளிச்சத்தால் இந்த உலகம் விடிந்துகொண்டிருக்கிறது.

வளர்த்தவர்களை ஈன்றவர்களாக எண்ணி வளர்வதே குழந்தைக்கு ஏற்றது. தம்மைப் பெற்றவர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பதைக் காட்டிலும் அதிர்ச்சியான செய்தி குழந்தைக்கு இருக்க முடியாது. தான் தேவையில்லாத உயிராகக் கருதப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகத்திற்கே தான் அழையாத விருந்தாளி என்பதைக்காட்டிலும் பெரிய அவலம் நிகழ வாய்ப்பில்லை. வளர்க்கிறவர்களும் குழந்தைக்கு அது தெரியக்கூடாது என்பதிலேயே குறியாக இருப்பார்கள். தெரிந்தால் அவர்கள்மீது இருக்கும் அன்பில் விரிசல் விழுந்துவிடுமோ என்கிற அச்சமே காரணம்.

தாங்களே பெற்றவர்கள் என்று மற்றவர்களையும் நம்பவைக்க, சிறகில் மூடி தாய்க்கோழி குஞ்சைக் காப்பாற்றுவதைப்போல சொல்லடியிலும், கல்லடியிலும் பாதுகாப்பவர்கள் இவர்கள்.

மும்பை நகரத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு திகைப்பு ஏற்படும். அங்கு இரண்டு நாட்களின் அலுப்பு ஒரே நாளில் உண்டாகிவிடும். எல்லா இடங்களிலும் நெரிசல். மின்சார வண்டியில் ஏறுவதைக் காட்டிலும் இறங்குவது சிரமம்.

மாநகரங்களில் தொலைவது கொடுமை. படித்தவர்கள்கூட முகவரி தெரியாவிட்டால் திரிந்துகொண்டே இருக்க நேரிடும்.

தத்தித்தத்தி நடக்கிற குழந்தை மும்பை நகர பெருவீதிகளில், ஜனசந்தடியில் தனித்துவிடப்பட்டால் எப்படி அது அடிபடாமல் தப்படி எடுத்து நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்கிறபோதே நமக்கு முதுகெலும்பு சில்லிடு கிறது.

அப்படி அனாதையாய் விடப்பட்ட குழந்தை ஒன்றை ஸ்வீடன் நாட்டு ஜோடிகள் தத்தெடுத்தார்கள். நிறத்தால், உருவத்தால் மாறுபட்டிருந்ததால் அந்தப் பெண்ணுக்கு வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் இல்லை என்ற உண்மை தெரிந்தது.

எல்லா நேரங்களிலும் பெற்றோர் மனம் பித்தாய் இருப்பதில்லை. பிள்ளைகள் மனமும் கல்லாய் கனப்பதில்லை.

இதயம் விசித்திரமானது. மென்மையாய் இருக்கும் அது சமயத்தில் கவலையால் கனக்கவும் செய்கிறது. பெற்றோர்கள் நிராகரித்தார்கள் என்பது தெரிந்தும், ஜெசிகா லிந்தெர் என்கிற அந்தப் பெண்ணுக்கு ஈன்றவர்களைப் பார்க்க இணையற்ற ஆசை.

இதுவரை மூலத்தைத் தேடி மூன்று முறை மும்பை வந்திருக் கிறார். அண்மையில் வந்தபோது அவரைக் கண்டுபிடித்த காவலரைக் கண்டுபிடிக்க முடிந்தது. சியான் மருத்துவமனை அருகில் 1981-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் நாள் 17 மாதங்களே ஆன பால்மனம் மாறாத அக்குழந்தையை அவர் பார்த்தார். திவாகர் கோங்கர் என்கிற அவர் அப்போது கான்ஸ்டபிளாக இருந்தார். இப்போது உதவி ஆய்வாளர். அவரைப் பார்க்க நேர்ந்ததும் ஜெசிகாவிற்கு முகமெங்கும் ஆனந்தம். உடலெங்கும் உற்சாகம். உணர்வெங்கும் பரவசம்.

‘நான் இந்தக் குழந்தையைப் பார்த்ததும் கைகளில் ஏந்திக்கொண்டு மாதுங்கா பகுதி முழுவதும் வலம் வந்தேன். அங்கிருக்கும் அத்தனைபேரிடமும் ‘காணாமல் போன குழந்தைக்காக புகார் செய்திருக்கிறார்களா?’ என்று வீடு வீடாக விசாரித்தேன். வேண்டுமென்றே தொலைத்தவர்கள் எதற்காகப் புகார் செய் கிறார்கள்! எல்லா காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் எங்கும் புகார் பெறப்படவில்லை. அடையாளம் காணக்கூட ஆள் அகப்படவில்லை’.

அதனால் அக்குழந்தை மானவ் சேவா சங்கம் என்கிற அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தையை ஸ்வீடனைச் சார்ந்த தம்பதியினர் தத்தெடுத்துச் சென்றனர். ஜெசிகா என்று அறியப்படும் அப்பெண்ணின் இந்தியப் பெயர் கமலினி. பெயர் வைப்பதிலிருக்கும் அக்கறை நமக்கு உயிர்காப்பதில் இருப்பதில்லை.

குழந்தைகள் அனாதையாக்கப்படுவது இழிவு. குற்ற உணர்வினால் பெண் குழந்தைகள் நட்டாற்றில் விடப்படுவது பேரிழிவு. அவர் களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். இந்த மலர்கள் ஆதர வில்லாததால் கசக்கி எறியப்படுவதற்காகவே கல்நெஞ்சங்கள் காத்திருக்கின்றன. அந்நிய நாட்டிற்கு வளர்ப்பு மகளாகச் சென்ற ஜெசிகாவின் மனநிலை எண்ணிப்பார்க்கவே கண்களை நனைக்கின்றது.

காலச்சக்கரம் யாருக் காகவும் காத்திருப்பதில்லை. அது சமயத்தில் காற்றைக் காட்டிலும் வேகமாகச் சுழல்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் தன்னைப் பெற்றவர்களைப் பார்க்க வேண்டும், அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆறுதலாய் அழ வேண்டும், தொடக்க காலத்தில் தன்னைத் தாங்கிய மடியில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்கின்ற அவா அந்தப் பெண்ணுக்கு வற்றவில்லை.

சொத்து பிரிப்பதில் கொஞ்சம் குறைந்தால் பெற்றோர்களிடம் விடுதலைப்பத்திரம் எழுதி வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். கேட்டபோது பணம் தராவிட்டால் மண்ணை அள்ளித்தூற்றுகிற மனிதர்கள் இருக்கிறார்கள்.

பெற்றவர்களையே ஒருமையில் அழைத்து உதாசீனம் செய்கிற மகன்கள் இருக்கிறார்கள். ‘எங்கே மகன் அடித்துவிடுவானோ?’ என்று நடுக்கத்தில் இருக்கும் பலவீனமான தந்தையைச் சந்தித்திருக்கிறேன். ‘பாகம் பிரித்தது சரியில்லை’ என்று வயதான தந்தையைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திய சிலரைப் பார்த்திருக்கிறேன். தாய் பெறுகிற முதியோர் உதவித்தொகையைப் பிடுங்கிக்கொண்டு செல்கிற மகன்களை நான் அறிவேன். ‘பதின்ம வயதுப்பையன் சகல நேரமும் மின்னணு ஊடகத்தில் குடிகொண்டு இருக்கிறான், பேசுவதேயில்லை’ என குறைபடும் பெற்றோரைக் கண்டிருக்கிறேன்.

இடுப்பைவிட்டு இறங்க மறுக்கும் ஒன்றரை ஆண்டுப் பருவத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கோ பெற்றோர் குறித்து வருத்தம் இல்லை. ‘அவர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே!’ என்கிற ஆதங்கமில்லை.

காவல்காரரை சந்திக்க ஏற்பாடு செய்த பெண்மணி கொடுத்த வாக்குமூலம் வியப்புக்குரியது. ‘ஜெசிகாவிற்கு அவர்கள்மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர்கள் கைவிட்டதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்திருக்கும். அவர்களைப் பார்த்தால் போதும் என்பதே அவள் வேட்கை’ என்று திருமதி பவார் குறிப்பிட்டிருக்கிறார்.

பெற்றோரை தேடும் இப்பெண்ணின் படலம் 1999-ல் ஆரம்பமாகிவிட்டது. ‘லயன்’ என்கிற திரைப்படத்தின் நகலாக இப்பெண்ணின் வாழ்க்கை இருக்கிறது. நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. மீண்டும் இந்தியாவிற்கு வந்து தாய், தந்தையரை கண்டுபிடித்தே தீருவேன் என்ற உறுதியுடன் அவர் இருக்கிறார். நம்பிக்கை உறுதியாக இருக்கிறபோது அது நடந்தே தீரும் என்று தோன்றுகிறது.

(செய்தி தொடரும்)

மூன்று பெற்றோர்கள்

கருவுறும்போது மரபுக்கூறு மாறுபாடுகள் நடந்து விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். இதை தடுப்பது குறித்து அறிவியல் தீவிரமாக ஆய்ந்து வருகிறது. பிரச்சினைக்குரிய ஜீன்களைக் கண்டுபிடித்து அவற்றை மாற்றுவதே சரியான தீர்வு.

நம் செல்லில் ‘மைட்டோகான்ட்ரியா’ என்கிற ஒன்று இருக்கிறது. செல்லுக்குத் தேவையான சக்தியை அது உற்பத்தி செய்கிறது. அதற்கென பிரத்யேகமான ஜீன்கள் இருக்கின்றன. செல்லின் நியூக்ளியசில் இருக்கிற ஜீன்களிடமிருந்து அது வேறுபட்டது. குறையுள்ள மைட்டோகான்ட்ரியா பல ஆபத்தான நோய்களுக்கு அடிகோலுகிறது.

இப்போது குழாய்க்குழந்தைகளில் அதை சரிசெய்ய வழியிருக்கிறது. நியூக்ளியசின் டி.என்.ஏ. இரண்டு பெற்றோர் களிடமிருந்து வரும்போது மைட்டோகான்ட்ரியா டி.என்.ஏ.வை மூன்றாவது பெற்றோரிடமிருந்து தயாரிக்க முடியும். கி.பி. 2000 ஆண்டில் மிட்சிகனில் அலானா என்கிற ஆரோக்கியமான குழந்தை இவ்வாறு பிறந்தது. அதற்கு மூன்று உயிரியல் பெற்றோர்கள். 

Next Story