நெல்லை தருவை பகுதியில் பாளையங்கால் கிளை கால்வாய் தூர்வாரும் பணி வசந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


நெல்லை தருவை பகுதியில் பாளையங்கால் கிளை கால்வாய் தூர்வாரும் பணி வசந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2017 2:30 AM IST (Updated: 11 Jun 2017 11:49 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை தருவை பகுதியில் பாளையங்கால் கிளை கால்வாய் தூர்வாரும் பணியை, வசந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நெல்லை,

நெல்லை தருவை பகுதியில் பாளையங்கால் கிளை கால்வாய் தூர்வாரும் பணியை, வசந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நெல்லை அருகே பழவூர் அணைக்கட்டில் இருந்து பாளையங்கால்வாய் பிரிந்து செல்கிறது. இதன் முதல் ‘‘ரீச்’’ தருவை கைப்பந்தல் பகுதியில் தொடங்குகிறது. இங்கிருந்து 2.600 கிலோ மீட்டர் தூரம் கிளை கால்வாய் மூலம் 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கிளை கால்வாயை வசந்தகுமார் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், ‘‘நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கால்வாய்கள், குளங்களை எனது சொந்த செலவில் தூர்வாரி சீர்படுத்தி வருகிறேன். இதற்காக ஒரு பொக்லைன் எந்திரம் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தருவை பகுதியில் பாளையங்கால்வாயின் முதல் ‘ரீச்’ கிளை கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்படுகிறது. இதன் மூலம் 400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதே போல் அரசு நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து செய்வதாக கூறும் பணிகள் முறையாக நடக்கவில்லை. எனவே அந்த பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தி குளங்கள், நீர்நிலைகளை தூர்வார வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் விஜயன், மாநகர வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால், காங்கிரஸ் நிர்வாகி கிறிஸ்டியான், தருவை காமராஜ், மாவட்ட விவசாய அணி சிவன் பாண்டி, பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வேலாயுத பாண்டியன், குமார், சுப்பிரமணியன், முருகன், ஈசுவரன், பரமசிவன், குத்தாலம் ரமேஷ், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story