ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது தவறு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது தவறு என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது. அ.தி.மு.க. அரசை பா.ஜனதா இயக்குவதாகவும், பினாமி அரசு எனவும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார். எந்த ஆட்சியையும் நாங்கள் இயக்கவோ, அதிகாரத்தை செயல்படுத்தவோ இல்லை. தனது முதல்–அமைச்சர் கனவு தகர்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே மு.க.ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறி வருகிறார்.
முறையான எதிர்க்கட்சியாக மு.க.ஸ்டாலின் செயல்படவில்லை. அ.தி.மு.க.வை எதிர்ப்பதை விட பா.ஜனதாவைத்தான் அதிகம் எதிர்க்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கூட பிரதமர் நரேந்திரமோடியைப் பற்றி குறைகூறி பேசியிருக்கிறார்கள். விவசாயிகளைப் பற்றி பேச ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் இல்லை.
ஒத்துழைப்புஆட்சி வேறு, கட்சி வேறு. கட்சி ரீதியில் நாங்கள் அ.தி.மு.க.வை எதிர்க்கிறோம். ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். ஜனநாயகத்துக்கு புறம்பாக பா.ஜனதா ஒரு போதும் செயல்படாது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரெயில் திட்டம், பறக்கும் சாலை திட்டம் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதற்கான இடத்தை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கலப்பட பால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி வருகிறார்கள். அவர்கள் அதிகாரப்பூர்வமான கருத்துகளையே பேச வேண்டும். நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் ஆதரவு யாருக்கு? என்பதை முதல்–அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தான் தெரிவிக்க வேண்டும். பிறர் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
நடவடிக்கைஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது தவறு. கட்சி ரீதியாக அவரை யாராவது சந்தித்து பேசலாம். தமிழகத்தில் லஞ்சம், கமிஷனை ஒழிக்க முதல்–அமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது முதல்–அமைச்சரின் கையில் தான் உள்ளது. மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்தால் ஆட்சி நீடிக்காது. அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உள்ளது. ஆனால் அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். கட்சியில் உள்ள குழப்பத்தால் ஆட்சிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பது எனது கருத்தாகும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.