மலேசிய சம்பவத்துக்கு இலங்கை அரசின் சதியே காரணம் நெல்லையில் வைகோ பேட்டி
மலேசிய சம்பவத்துக்கு இலங்கை அரசின் சதியே காரணம் என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நெல்லை,
மலேசிய சம்பவத்துக்கு இலங்கை அரசின் சதியே காரணம் என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது வைகோ கூறியதாவது:–
மலேசிய நாட்டில் பிணாங்கு மாகான துணை முதல் மந்திரி ராமசாமி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றேன். அந்த நாட்டு தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கிய உடன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் எனது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்து விட்டு, எனது பெயர் கருப்பு பட்டியலில் இருப்பதாக கூறினார்கள். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அனுமதிக்க வில்லை.
நான் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறி 16 மணி நேரம் கைப்பிடி இல்லாத நாற்காலியில் சிறைபிடித்து வைத்து விட்டனர். விடுதலைப்புலிகள் ஆதரவாளன் என்பதற்காக என்னை கோலாலம்பூர் சிறையில் அடைத்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.
இலங்கை சதிபின்னர் அங்கிருந்து இந்திய நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டேன். மலேசியாவில் நடந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசின் சதியே காரணம் ஆகும். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பிணாங்கு மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.
இதன் பிறகு இலங்கை அரசு, நான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் வன்னி காட்டுப் பகுதியில் அவர்களது விடுதலைப்புலிகள் சீருடையில் இருந்த புகைப்படங்களையும் சிங்கள ராணுவ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்த உள்ளனர். என்னை வெளிநாடுகளுக்கு செல்ல விடாமல் சதி செய்து உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு நன்றிஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் விருப்பு, வெறுப்பு இன்றி இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதி கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மன நிறைவோடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே ஆரோக்கிய அரசியல் நிலைமை தமிழகத்தில் தொடர வேண்டும். தமிழகத்தில் இனி மோதல் போக்கு அரசியல் வரக்கூடாது.
மத்திய அரசின் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மதுரை அல்லது தஞ்சையில் அமைப்பது தொடர்பாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவரவர் பகுதிக்கு வரவேண்டும் என்று கேட்பது அவர்களது உரிமை ஆகும். அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரு முடிவு செய்து செயல்படுத்துவார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிஇருப்பது குறித்து கருத்து கூற முடியாது.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நெல்லைக்கு வரவேண்டும் என்று கேட்பீர்களா? என்று கேட்கிறீர்கள், ஏற்கனவே குழப்பம் ஏற்பட்டுள்ளது, இதில் நாமும் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமா?
நெல்லையில் உள்ள சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தை, ஆணையர் அந்தஸ்தில் இருந்து குறைத்து மதுரை அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் கூட்டணிதமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க முடியும் என்பதை தேர்தல் வரும் போதுதான் தீர்மானிக்க முடியும். மேலும் யாருடன் கூட்டணி என்பதையும் தேர்தல் அறிவித்த பிறகுதான் முடிவெடுத்து கூற முடியும்.
தமிழக அரசியல் நிலவரத்தில் தற்போது குழப்பமான தெளிவற்ற நிலை உள்ளது. அ.தி.மு.க. அணிகள் இணைந்து திடமான தமிழக அரசாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.
திராவிட இயக்கத்தை பெரியார், அண்ணா ஆகியோர் உருவாக்கி மறுமலர்ச்சியை, சமூக நீதி உள்ளிட்ட தமிழக மக்களுக்கான சுய மரியாதையை நிறைவேற்றிக் கொடுத்து உள்ளனர். அத்தகைய திராவிட இயக்கம் மீது தற்போது சிலர் அம்பு தொடுக்கின்றனர். காய்த்த மரம் மீது கல் வீசப்படும் என்பது போல் திராவிட இயக்கம் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதுபற்றி கவலைப்பட தேவையில்லை.
இந்த பேட்டியின் போது, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.