சோமங்கலத்தில் மாநகர பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம் ஆம்புலன்ஸ் வராததால் வலியால் துடித்த பரிதாபம்
சோமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்கள், ஒரு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் வலியால் அலறி துடித்தனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சோமங்கலம் வழியாக சென்னை வடபழனி நோக்கி மாநகர பஸ் ஒன்று நேற்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சோமங்கலம் மேட்டூர் பகுதியில் உள்ள சாலை வளைவில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சோமங்கலம் பகுதியை சேர்ந்த எட்டியப்பன்(வயது 21), நல்லூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(17) இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலியால் துடித்தபடி சாலையில் கிடந்தனர்.
ஆம்புலன்ஸ் வரவில்லைவிபத்து நடந்த உடன் பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தகவல் கொடுத்து ஒரு மணி நேரமாகியும் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர்கள் இருவரும், வலியால் அலறி துடித்தனர். ஒருவர் பஸ்சுக்கு அடியிலும், மற்றொருவர் வெளியேயும் துடித்தபடி இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் வந்தது.
வேகத்தடை அமைக்க கோரிக்கைபடுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலை வளைவான அந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக வரும்போது இதுபோல் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும், இதை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.