ஆவின் நிறுவனத்தில் போலி சான்றிதழ் கொடுத்து டிரைவர் வேலைக்கு சேர்ந்த 2 பேர் கைது
ஆவின் நிறுவனத்தில் போலி சான்றிதழ் கொடுத்து டிரைவர் வேலைக்கு சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் செயல்படுகிறது. வெளிமாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு பதப்படுத்தப்படுகிறது. பின்னர் பாக்கெட் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள போக்குவரத்து பிரிவில் டிரைவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிலர் போலி சான்றிதழ் கொடுத்து டிரைவர் வேலைக்கு சேர்ந்து இருப்பதாக போக்குவரத்து துணை பொது மேலாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து முருகன் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார்.
2 பேர் கைதுஇதனையடுத்து மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சக்தி நகர் சாய்பாபா தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 33), காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பிளாப்பூர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் (26) ஆகியோர் போலி சான்றிதழ் கொடுத்து கடந்த ஆண்டு டிரைவர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.