கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை: வீடு இடிந்ததில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி சாவு; 7 பேர் படுகாயம்
கர்நாடக கடலோர மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையின் போது கார்வார் அருகே உள்ள கும்மட்டா பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மங்களூரு,
கர்நாடக கடலோர மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையின் போது கார்வார் அருகே உள்ள கும்மட்டா பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 24 மணி நேரத்திற்கு மழைநீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
கோடை வெயில் தாக்கம்கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்தது. இதனால் குடிக்க தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஏரிகள், குளங்கள் வறண்டு போனதாலும், வறட்சியின் காரணமாகவும் கால்நடைகளும் உணவு இன்றி அவதிப்பட்டு வந்தன.
இந்த கோடை வெயிலின் தாக்கம் மலைநாடுகளான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகிலும் நாளுக்குநாள் அதிகரித்தது. அதிலும் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வாரிலும் வெயில் 90 டிகிரிக்கும் மேல் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள்.
பருவமழைஇந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது கர்நாடகத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. சிக்கமகளூரு, சிவமொக்கா, பெங்களூரு, மைசூரு, குடகு, ராமநகர், மண்டியா ஆகிய மாவட்டங்களில் தினமும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதேப்போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்நாடக கடலோர மாவட்டங்களில் பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்புமேலும் வாகன ஓட்டிகளும் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் தவித்தனர். நேற்று காலை ஆரம்பித்த மழை இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மங்களூரு அருகே பஜ்பே விமான நிலையம் பகுதியில் உள்ள கெஞ்சாரு சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதுகுறித்து அறிந்த மங்களூரு கிழக்கு போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.
2 சிறுமிகள் சாவுஅதேப்போல் மங்களூரு அருகே உள்ள தண்ணீர்பாவி பகுதியில் கனமழையின் போது கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. விடுமுறை தினமான நேற்று கனமழை பெய்ததால் பனம்பூர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் கார்வார் மாவட்டம் குமட்டா பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களையும், பலியான 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.
24 மணி நேரம் நீடிக்கும்பின்னர் காயமடைந்தவர்களை அப்பகுதியினர் சிகிச்சைக்காக கார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரம் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.