கர்நாடக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி பெங்களூருவில் இன்று ஆலோசனை
கர்நாடக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி பெங்களூருவில் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி பெங்களூருவில் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
விவசாய கடன் தள்ளுபடிமுக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்கள் மீது உள்ள சிவப்பு சுழல் விளக்கை இரவோடு இரவாக நீக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. அதே போல் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?. இது சரியல்ல. மத்திய அரசு உடனடியாக இதுபற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால், தேசிய வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள் அதிருப்தி அடைவார்கள். இதனால் விவசாயிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வு உணர்வு ஏற்படும். அதனால் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை முதலில் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம்.
நல்ல முடிவை எடுக்கும்விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை அறிவிக்கட்டும், அதன் பிறகு நாங்கள் கடனை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசிக்கிறோம். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும். விவசாயக் கடன் பெற்றவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகம் இல்லாததால், கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு தயங்குவதாக சிலர் சொல்கிறார்கள். இது தவறான தகவல். இதுபோல் அரசு சிந்திக்கவில்லை.
நேரு குடும்பத்தால் நாடு சீரழிந்துவிட்டதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது ஆகும். நேரு குடும்பம் மற்றும் காங்கிரசின் வரலாறு குறித்து பா.ஜனதாவினர் அறிந்துகொள்ள வேண்டும். மகாத்மா காந்தியை பற்றி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தரக்குறைவாக பேசியுள்ளார். இது சரியல்ல. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராகுல் காந்தி ஆலோசனைநாட்டில் சாதிகள் ஒழிய வேண்டும் என்று நாம் பேசுகிறோம். இந்த சூழ்நிலையில் காந்தியின் சாதி குறித்து அமித்ஷா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராகுல் காந்தி நாளை(அதாவது இன்று) பெங்களூரு வருகிறார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதில் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்டிரல் கல்லூரியில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நடக்கிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இதில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் 500 பேர் கலந்து கொள்கிறார்கள். நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வெற்றிக்கான வியூகங்களை எவ்வாறு வகுப்பது என்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.