முழுமையான முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை 17–ந் தேதி தொடக்கம் இறுதிக்கட்ட பணிகளை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேரில் ஆய்வு


முழுமையான முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை 17–ந் தேதி தொடக்கம் இறுதிக்கட்ட பணிகளை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2017 2:00 AM IST (Updated: 12 Jun 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வருகிற 17–ந் தேதி, முதல் கட்ட திட்டத்தின் முழுமையான மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

பெங்களூரு,

பெங்களூருவில் வருகிற 17–ந் தேதி, முதல் கட்ட திட்டத்தின் முழுமையான மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை நேற்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் 2020–ம் ஆண்டுக்குள் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார்.

முதல் கட்ட மெட்ரோ ரெயில்

பெங்களூருவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளன. நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையில் சுரங்க பாதையில் பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. அந்த பாதையில் வருகிற 17–ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைப்பார் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி மார்க்கத்தில் அமைந்துள்ள சுரங்க பாதையில், இறுதி வடிவம் கொடுக்கும் சிறு சிறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த பணியை பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக மெஜஸ்டிக்கில் அமைந்துள்ள சுரங்க ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

ரூ.14 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இதில் சுரங்க பாதைகளை அமைக்கும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு 42 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட மெட்ரோ ரெயில் முழுமையான சேவை தொடக்க விழா வருகிற 17–ந் தேதி பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு ரெயில் சேவையை தொடங்கி வைப்பார்.

முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதால் மெட்ரோ ரெயில் 2–ம் கட்ட பணிகளுக்கு பல்வேறு வங்கிகள் மற்றும் அமைப்புகள் கடன் வழங்க முன்வந்துள்ளன. இந்த பணிகள் 2020–ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 3–ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பெண்களுக்கு தனியாக ஒரு பெட்டியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

80 கிலோ மீட்டர் வேகத்தில்...

பெங்களூரு மெட்ரோ ரெயில் கழக நிர்வாக இயக்குனர் பிரதீப்சிங் கரோலா கூறுகையில், “பெங்களூருவில் மெட்ரோ சுரங்க பாதையில் செல்போன் “நெட்ஒர்க்“ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுரங்க பாதையில் செல்லும்போதும் செல்போன்கள் எந்த பிரச்சினையும் இன்றி செயல்படும். மத்திய ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் நேரில் ஆய்வு செய்து, சில சிறிய சிறிய பணிகளை செய்து முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரெயில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது“ என்றார்.


Next Story