எய்ம்ஸ் மருத்துவமனை வேறு மாநிலத்துக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும் கடலூரில் ஜி.கே.வாசன் பேட்டி


எய்ம்ஸ் மருத்துவமனை வேறு மாநிலத்துக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும் கடலூரில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியால் எய்ம்ஸ் மருத்துவமனை வேறு மாநிலத்துக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும் என்று கடலூரில் ஜி.கே.வாசன் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கடலூர் வந்தார். அதைத்தொடர்ந்து கடலூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வர தயங்குகிறது. ஏற்கனவே 6 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதி முறையாக, சரியாக இருக்கிறதோ அங்கு அமைய வேண்டும் என்பது தான் திட்டம்.

இந்த திட்டம் குறித்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போதே பேச்சுவார்த்தை நடந்தது. சமீப காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியிலும், கட்சியிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதிலும் தாமதம் ஆகுகிறது. கடந்த சில நாட்களில் அ.தி.மு.க. ஆட்சியிலும் சில பிரச்சினைகள், சில அரசியல் எழுந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அனுமதிக்கக்கூடாது

யாரும், எந்த இடத்துக்கும் மருத்துவமனையை கட்டாயப்படுத்தியோ, அரசியல் ஆக்கியோ, அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியோ கொண்டு செல்வதற்குண்டான பணியை செய்ய முடியாது. மக்கள் நலன் கருதி எந்த மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதி சரியாக, முறையாக இருக்கிறதோ அந்த மாவட்டத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும். இது தான் நியாயமான கோரிக்கை. ஆளுகிற ஆட்சி நெருக்கடியை வைத்து மேலும் நெருக்கடியை ஆட்சிக்குள் ஏற்படுத்தி கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை வர விடாமல் தடுத்து அரசியல் செய்வதை முதல்-அமைச்சர் அனுமதிக்கக்கூடாது.

நெடுவாசல் போராட்டம்

இந்த அரசியல் நெருக்கடியால் எய்ம்ஸ் மருத்துவமனை வேறு மாநிலத்துக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து 38 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி உள்பட பெரும்பாலான அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் மக்களுக்கு அரசு நம்பிக்கை கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மக்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல தான் திட்டங்கள் நடைபெறும். இல்லையென்றால் நடைபெறாது என்று வாய் வார்த்தையாக முதல்-அமைச்சர் கூறி வருகிறாரே தவிர மத்திய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க தயாராக இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்கள் மீது திணிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.

ஒடுக்க வேண்டும்

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வருமா? உள்ளாட்சி தேர்தல் வருமா? என்று முதல்-அமைச்சர், அமைச்சர்கள் முடிவு செய்ய முடியாது. சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்வார்கள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசு செயல்படவில்லை. தொடர்ந்து அவ்வாறு செயல்பட்டால் கட்டாய மாற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.

பாலில் கலப்படம், பிளாஸ்டிக் அரிசி விற்பனை என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உணவு பொருட்களில் கலப்படும் செய்வதை கண்காணித்து, அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பற்றி அமித்ஷா பேசியது கண்டனத்திற்குரியது. தவறாக பேசி இருந்தால் அதை மக்கள் ஏற்கமாட்டார்கள். கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி, வேளாண் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் சிப்காட் கழிவுகளால் நகர, வட்டார பகுதி மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறி வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததால் குறுவை, சம்பா சாகுபடி பொய்த்து விட்டது. ஆகவே விவசாய கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கடலூர் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் மத்திய மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் முனவர்பாஷா, மாநில துணை தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், மாநில செயலாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ரகுபதி வரவேற்றார்.

கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிச்சையப்பன், வரதராஜன், ராஜலிங்கம், ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேந்திரன், சேகர், வட்டார தலைவர்கள் குமாரசாமி, தரணிதரன், மாணவர் காங்கிரஸ் சதீஷ், விஜய், மீனவரணி ராமலிங்கம், பாபுஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story