நீண்ட கால கோரிக்கை திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?


நீண்ட கால கோரிக்கை திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

141-வது கலெக்டர்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் வரலாறு கி.பி. 1,801-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களின் ஆட்சி பொறுப்பில் இருந்த நிர்வாகங்களில் திருச்சி மாவட்ட நிர்வாகமும் ஒன்று. இத்தகையை பழம் பெருமை வாய்ந்த திருச்சி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஆக ஜூனியர் ஜான் வாலேஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி இருந்துள்ளார். அந்த வரிசையில் திருச்சி மாவட்டத்தின் 141-வது கலெக்டர் ஆக கடந்த 4-ந்தேதி பொறுப்பு ஏற்ற கே.ராஜாமணி, பத்திரிகையாளர்களை சந்தித்த போது திருச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள், நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு அவற்றை விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

புதிய நம்பிக்கை

தனது முதல் பேட்டியிலேயே கலெக்டர் தெரிவித்த இந்த கருத்துகள், திருச்சி மாவட்ட மக்களுக்கு குறிப்பாக திருச்சி மாநகர மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இதுவரை திருச்சி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த எந்த ஒருவரும் இப்படி ஒரு உறுதியை மக்களுக்கு அளித்தது இல்லை. திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மக்களின் கோரிக்கைகள், நிறைவேற்றப்படாத திட்டங்கள் பற்றி கலெக்டர் நிச்சயம் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பட்டியலிடுவார் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களை பற்றி மக்களுக்காக நாமும் பட்டியலிடுவதில் தவறு இல்லை என்று கூறலாம்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

அந்த வகையில் திருச்சி மாநகர மக்களின் சுமார் 25 ஆண்டு கால கனவு திட்டம் ஒன்று உண்டென்றால் அது திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது தான். தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை பொறுத்த வரை அரை வட்ட சுற்றுச்சாலை, விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணி என இன்னும் பல உள்ளன என்றாலும், அவை அனைத்திலும் முதலிடம் வகிப்பது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தான்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது உள்ள மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றை தாங்க முடியாமல் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மத்திய பஸ் நிலைய பகுதியை இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் கூட கடந்து செல்ல முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த பிரச்சினையில் இருந்து மக்களுக்கும், வாகனங்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க வேண்டும் என்பது தான்.

விதி செய்த சதியா?

கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், பின்னர் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன. இதற்கான காரணம் என்ன என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. திருச்சியை விட சிறிய நகரங்களில் கூட ஒருங்கிணைந்த பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அவை சிறந்த வழிகாட்டியாக திகழ்கின்றன. ஆனால் திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதியாக இருந்தும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படாதது காலத்தின் கோலமா? அல்லது விதி செய்த சதியா? என்று தெரியவில்லை.

எனவே திருச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராவது ஏற்கனவே அளித்த உறுதிப்படி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் முக்கியத்துவம் கருதி அதனை சரியான இடத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Related Tags :
Next Story