நாகராஜா கோவிலில் துணிகரம்: 2 பெண்களிடம் 8½ பவுன் தங்க சங்கிலிகள் பறிப்பு


நாகராஜா கோவிலில் துணிகரம்: 2 பெண்களிடம் 8½ பவுன் தங்க சங்கிலிகள் பறிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 4:30 AM IST (Updated: 12 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

நாகராஜா கோவிலில் 2 பெண்களிடம் 8½ பவுன் தங்க சங்கிலிகளை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வைகாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவில் வளாகத்தில் உள்ள நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தார்கள்.

இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்த 2 பெண் பக்தர்களிடம் தங்களது கைவரிசையை காண்பித்து நகைகளை பறித்துச் சென்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சென்னையை சேர்ந்தவர்...


சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி லெட்சுமியம்மாள் (வயது 78). இவருடைய உறவினர் சுசீந்திரம் பகுதியில் வசித்து வருகிறார்கள். உறவினர் வீட்டுக்கு லெட்சுமியம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தார். பின்னர் அவர் நேற்று வைகாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்.

கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்கச்சங்கிலி அறுந்ததைப்போன்று உணர்ந்தார். உடனே அந்த சங்கிலியை கழுத்தில் இருந்து கழற்றி பர்சில் வைத்து, அதனை கையில் வைத்திருந்த கைப்பையில் வைத்தார். பின்னர் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லெட்சுமியம்மாள் அங்கிருந்த போலீசாரிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு பெண்


மருதங்கோடு அருகே உள்ள கப்பியறையை அடுத்த பூக்கடை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவருடைய மனைவி ( 56). இவர் நேற்று நாகராஜாகோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது இவருடைய கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போய் விட்டது. இவரும் வெளியே வந்து பார்த்தபோது சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அழுது புலம்பிய அவர் போலீசாரிடம் புகார் செய்தார்.

ஒரே நாளில் 2 பெண் பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் போலீசாரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதையடுத்து வடசேரி போலீசார் நாகராஜா கோவில் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் சந்தேகத்துக்குரிய மர்ம நபர்கள் யாரும் சிக்கவில்லை. இருப்பினும் அந்த காட்சியில் சி.டி.யில் பதிவு செய்து போலீசார் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

இதேபோல் இந்த கோவிலில் சங்கிலி பறிப்பு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பும் நடந்தது. அந்த கும்பல்தான் தொடர்ந்து கை வரிசை காட்டி வருகிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story