மும்பையில் பரவலாக மழை தாராவியில் 25 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மும்பையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தாராவியில் 25 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மும்பை,
மும்பையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தாராவியில் 25 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பருவமழைமராட்டியத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதம் பருவமழைக்காலம் ஆகும். ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கினாலும் ஜூலையில் தான் தீவிரமடைந்து கனமழை கொட்டும். தற்போது மும்பையில் பருவமழைக்கு முந்தையை மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று நகரில் அனைத்து இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. தாராவி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது.
மழைநீரில் குளியல்இதனால் அந்த பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சயானில் உள்ள 24ஏ என்ற சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அந்த வழியாக பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்றனர்.
அதே நேரத்தில் சிறுவர்கள் தேங்கிய மழை நீரில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். சற்று தொலைவில் உள்ள இன்னொரு சாலையில் மூட்டளவிற்கு தண்ணீர் தேங்கியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது ஏறி சிறுவர்கள் மழைநீரில் ‘டைவ்’ அடித்து ஆனந்த குளியல் போட்டனர்.
வீடுகளில் புகுந்த தண்ணீர்தாராவியில் பெய்த பலத்த மழை காரணமாக தோபிகாட் குடிசை பகுதியில் 25 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் செய்வதறியாது திகைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்தன. எலக்ட்ரானிக் பொருட்கள் நனைந்து விடாமல் அப்புறப்படுத்தி வைத்தனர். மழை நின்ற பிறகு அவர்கள் தண்ணீரை பாத்திரத்தில் கோரி வெளியே ஊற்றினார்கள்.
தாராவி சோஷியல்நகர் மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியதில் அங்கு காய்கறி வாங்க மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்தனர்.