மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளியை மீட்டு தரவேண்டும் மனைவி, கலெக்டரிடம் மனு


மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளியை மீட்டு தரவேண்டும் மனைவி, கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:00 AM IST (Updated: 13 Jun 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளியை மீட்டு தரும்படி திண்டுக்கல் கலெக்டரிடம், மனைவி மனு கொடுத்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா குடகிப்பட்டி அருகேயுள்ள மணக்காட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் மனைவி சித்ரா (வயது 36). இவர் நேற்று தனது மகன் மோகன் (17), மகள் காயத்ரி (14) ஆகியோருடன் வந்து, கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் ரத்தினக்குமார் மலேசியாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சென்றார்.

அங்கு கோலாலம்புரில் உள்ள சுங்கைபீசி பகுதியில் ஒரு கடையில் முடிதிருத்தம் தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி இரவு போலீசார் திடீரென எனது கணவர் வேலை பார்த்த கடைக்கு வந்துள்ளனர். பின்னர் கடையில் சோதனை செய்து போதைபொருள் இருப்பதாக கூறி, எனது கணவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

மீட்க வேண்டும்

அதனை நாளிதழ்களில் வெளியான செய்தி மூலம் அறிந்தேன். எனது கணவர் முடிதிருத்தும் வேலை செய்வதற்காக மட்டுமே மலேசியா சென்றார். மேலும் இதுவரை, அவர் வேறு எந்த விதமான தவறும் செய்ததில்லை. எனவே, அவர் தவறு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. வேலைக்கு சென்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் நானும், எனது குழந்தைகளும் தவித்து வருகிறோம். எனவே, மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவரை மீட்டு, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்து விசாரிக்கும்படி கலெக்டர் டி.ஜி.வினய், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story