அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
சின்னாளப்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சி அண்ணாமலையார்மில்ஸ் காலனியில், சுமார் 1,500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதியில் குடிநீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5–க்கும் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
முற்றுகைஇதுதவிர தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை. இதுதவிர சாக்கடை கால்வாயும் முறையாக தூர்வாரப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கடந்த மாதம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக அதிகாரிகள் கிராம தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பரபரப்புஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசந்திரன், ஊராட்சி செயலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.