தஞ்சையில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின பேரணியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் தஞ்சை ரெயிலடியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நேற்றுகாலை தொடங்கியது. பேரணியை கலெக்டர் அண்ணாதுரை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ–மாணவிகள் திரளாக கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் முறையை அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முதல் கையெழுத்து போட்டார். தொடர்ந்து அவர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டினார். பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறும்போது, குழந்தை மற்றும் வளரினம் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986–ன் படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க வழிவகை உள்ளது. தஞ்சை மாவட்டம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக திகழ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
உறுதிமொழிஇதில் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ், முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், மாவடட கல்வி அலுவலர் சின்னையன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரஸ்வதி, தாசில்தார் தங்க.பிரபாகரன், சைல்டு லைன் இயக்குனர் ஆனந்த்ஜெரால்டு செபஸ்டின், ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் தொடர்பான உறுதிமொழியை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.