வீட்டுவரி ரசீது வேறு பெயருக்கு மாற்றம்: பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


வீட்டுவரி ரசீது வேறு பெயருக்கு மாற்றம்: பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுவரி ரசீது வேறு பெயருக்கு மாற்றம்: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி வடக்குகாலனியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி பரிமளா (வயது45). இவர் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான வீட்டுவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அந்த வீட்டிற்கு வேறு ஒருவர் பெயரில் வரிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா இது குறித்து விசாரித்து உள்ளார். அப்போது நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் பெயரில் ரசீது வழங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பரிமளா தனது பெயருக்கு மாற்றி ரசீது வழங்கும்படி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டு உள்ளார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரிமளா நேற்று தனது உறவினர்களுடன் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார். பின்னர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முயன்றார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் நாமக்கல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான ரசீது மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பரிமளாவின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று நாமக்கல் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story