கண்மாய்கள் தூர்வாருவதில் விதிமுறை மீறல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்


கண்மாய்கள் தூர்வாருவதில் விதிமுறை மீறல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி பகுதியில் கண்மாய்கள் தூர்வாருவதில் விதிமுறை மீறி மண் அள்ளுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க ஊருணிகள், கண்மாய்களை தூர்வாரி ஆழப்படுத்தவும் மழைக்காலத்தில் அதிக அளவில் நீரை சேமிக்கவும், நீர்நிலைகளில் உள்ள மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பயன்படுத்தி பரமக்குடி பகுதியில் உள்ள உரப்புளி, வேந்தோணி, கீழப்பெருங்கரை, உலகநாதபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஊருணிகளை ஆழப்படுத்தவும், சவடுமண் எடுக்கவும் பரமக்குடி தாசில்தாரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் விதிமுறை மீறி உருணி, கண்மாய்களில் ஆழமாக தோண்டி மண்,மணலை லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் அள்ளிச்சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் நாளொன்றுக்கு பல லட்ச ரூபாய் வரை மண்,மணலை விற்பனை செய்கின்றனர். பரமக்குடி பகுதியில் அள்ளப்படும் மண் மாவட்டத்தின் பல ஊர்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.

போலி ரசீது

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கிராம மக்கள் கேட்டால், நாங்கள் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம் எனக்கூறி அதற்கான ரசீது புத்தகத்தையும் காண்பிக்கின்றனர். அந்த ரசீது போலியாக அவர்களே அச்சடித்து வைத்துள்ளதாகவும் இதுபற்றி அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

பெயரளவில் சவடுமண் எடுக்கவும், கால்வாய், ஊருணிகளை தூர்வாரவும் தாசில்தாரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு மணல் அள்ளப்பட்டு வருவது பற்றி கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறினால் நாங்கள் என்ன செய்வது, மேல் அதிகாரிகள் தான் அனுமதி வழங்குகின்றனர். அவர்களிடம் முறையிடுங்கள் என்று அலட்சியமான பதிலை கூறுகிறார்களாம். மணல் அள்ளிச்செல்லும் லாரிகள் வேகமாக செல்வதால் சாலைகளும் சேதமடைந்து விபத்து அபாயம் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

கோரிக்கை

மேலும் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றும் சில இடங்களில் மண் அள்ளுவதற்கு தகராறும் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். பரமக்குடி சப்-கலெக்டராக பணியாற்றிய சமீரன் மீன்வளத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த இடம் காலியாக உள்ளது.

இதனால் அனுமதியின்றி மணல் அள்ளுவது தாராளமாக நடக்கிறது. எனவே பரமக்குடிக்கு விரைவில் சப்-கலெக்டரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story