ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கடிதம் கொடுக்கவில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கடிதம் கொடுக்கவில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

“ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கடிதம் கொடுக்கவில்லை“ என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

பிரதம மந்திரியின் எரிசக்தி திட்டத்தின் அடிப்படையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 5 கோடி பெண்களுக்கு எல்.பி.ஜி. இணைப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இதற்கான தொடக்க விழா நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திட்டத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான பெண்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கினார்.

நாடு முன்னேறுகிறது


முன்னதாக நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வெளிவிவகாரத்துறை, ரெயில்வே துறை, ராணுவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பிற நாடுகள் ஆச்சரியப்படும் அளவுக்கு நமது நாடு வளர்ச்சி பெற்றுள்ளது, முன்னேறிக் கொண்டிருக்கிறது. சாலை மேம்பாட்டுத்துறையும் முன்னேறி இருக்கிறது. இந்த பெருமை எல்லாம் பிரதமரையே சாரும். இன்று இருக்கக்கூடிய ஒட்டு மொத்த சாலைகளோடு, தேசிய நெடுஞ்சாலைகளின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2 சதவீதம்தான் தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன.

ஒரு லட்சத்து 13 ஆயிரம் கிலோமீட்டராக இருந்து கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலையை 2 லட்சம் கிலோமீட்டராக மாற்றக்கூடிய மாற்றும் எல்லா முயற்சியிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான சாலைப்பணிகள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நான்கு வழிச்சாலை பணிகள் ரூ.2,300 கோடியில் நடக்கிறது. எல்லா துறைகளிலும் தமிழகத்துக்கும், குமரி மாவட்டத்துக்கும் தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

வர்த்தக துறைமுகம்


வர்த்தக துறைமுகம் கொண்டு வருவதற்கு சிலருடைய சுயநலம் மட்டும்தான் தடங்கலாக இருக்கிறதே தவிர வேறு எந்த தடங்கலும் இல்லை. ஆனால் உறுதியோடு இருக்கிறோம். இந்த துறைமுகத்தால் ஏதாவது பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் அதற்கு தக்கபடி எல்லா தீர்வுகளையும் நாம் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதில் முதல் பயனாளிகளாக இருக்கப் போவது அந்தப்பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்கள் தான் என்பதில் 2–வது கருத்தே கிடையாது. அவர்கள் அதிகப்படியான லாபம் அடையப்போகிறார்கள்.

அவர்களுக்கென்று தனியாக மீன்பிடி துறைமுகம், மீன்பதனிடும் சாலைகள், மீன் விற்பனைக்கூடங்கள் பல நல்ல வி‌ஷயங்கள் அமைய உள்ளன. பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு, முதலில் எந்த இடத்தில் துறைமுகம் வருகிறது என்பதே முடிவாகவில்லையே? அரசியல்வாதிகள் செய்த குழப்பத்தின் காரணமாக சில தனிநபர்களுக்கும், சில அமைப்புகளுக்கும்கூட துறைமுகம் தொடர்பான குழப்பம் வந்துள்ளது. இனயம் துறைமுகம் அமைய காலதாமதம் ஆவதால் அதற்கான திட்ட மதிப்பீடு கூடுதலாகவும் வாய்ப்பு உள்ளது.

சரியான கருத்து


எந்த காரணத்தைக் கொண்டும் ரெயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்படாது என்று ரெயில்வே துறை மந்திரியே தெளிவாகக் கூறியிருக்கிறார். துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக சாகர்பாலா திட்டம் மூலமாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.2½ லட்சம் கோடியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். விவசாயிகள் தொடர்பாக நடிகர் விஜய் கூறியிருக்கும் கருத்து மிகச்சரியான வி‌ஷயம் தான். தன்னிறைவு என்று வரும் போது கிராமத்து மக்கள் தங்களை எல்லா வசதிகளும் பெற்றவர்களாக உணர வேண்டும்.

விவசாயத்துக்கு தேவையான எல்லாப்பொருட்களும் கிடைக்கக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் உணர வேண்டும். பிரதமராக நரேந்திரமோடி வந்தபிறகு தரமான விதை, தரமான உரம் கொடுப்பது, மண் ஆய்வு ஏற்பாடு, பாசன ஏற்பாடு, பயிர் செய்வதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க ஏற்பாடு, பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு போன்ற வசதிகளை மத்திய அரசு செய்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்


மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை முறையாக தமிழகத்தில் பயன்படுத்தியிருந்தால் விவசாயிகளுக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு தற்போது ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் இது போதாது. புறந்தள்ளப்பட்ட ஒரு மாவட்டமாக குமரி மாவட்டம் இருந்து வந்தது. ஒரு காலத்தில் நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று சொன்ன அரசாங்கம் இருந்தது. தற்போது குமரி மாவட்டம் எங்கள் பாக்கியம் என்று சொல்லும் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இந்த மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களிலும் திட்டங்கள் அதிகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அதனை எதிர்த்து போராடி வரும் மக்களை சம்பந்தப்பட்ட துறை மந்திரிகள் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். அவர்கள் அச்சப்படும் வகையில் இந்த திட்டம் அமையாது என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சிக்கு சென்றிருந்தபோதுகூட ஒரு மணி நேரம் காத்திருந்து அந்த மக்களை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். தமிழக அரசு இந்த திட்டம் வேண்டாம் எழுத்துப் பூர்வமாக மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தால் இந்த திட்டத்தை மத்திய அரசு விட்டுவிடப்போகிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story