மலவள்ளியில் முன்னாள் கவுன்சிலரின் மகன் அரிவாளால் வெட்டிக்கொலை
மலவள்ளியில் பட்டப்பகலில் முன்னாள் கவுன்சிலரின் மகன் ஒருவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
ஹலகூர்,
மலவள்ளியில் பட்டப்பகலில் முன்னாள் கவுன்சிலரின் மகன் ஒருவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
முன்னாள் கவுன்சிலரின் மகன்மண்டியா மாவட்டம் மலவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பசவராஜு. இவர் மலவள்ளி புரசபை முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவரது மகன் பிரனேஷ்(வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள புரசபைக்கு சொந்தமான 2 கடைகளை ஏலம் எடுத்து இருந்தார். இதனால் அதேப்பகுதியைச் சேர்ந்த ரவுடியான முத்து என்பவருக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனால் முத்துவின் நண்பனான சிவன் என்பவருக்கும், பிரனேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கொலைஇதுகுறித்து அவ்வப்போது பிரனேஷ் தரப்பினரும், சிவன் தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர். அதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் பிரனேஷ் மலவள்ளியில் உள்ள ஒரு சுல்தான் சாலையில் தனது நண்பர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சிவனும், அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து பிரனேசின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க வந்த அவருடைய நண்பரையும் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரனேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடைய நண்பர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தங்களது கொலை திட்டம் அரங்கேறியதும் சிவனும், அவருடைய கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பரபரப்புஇதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவிதா, மலவள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு மேத்யூ தாமஸ் மற்றும் மலவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரனேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பலத்த வெட்டுக்காயம் அடைந்திருந்த அவருடைய நண்பரை மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரனேசின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.