பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை என்பது சுத்தமான பொய்


பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை என்பது சுத்தமான பொய்
x
தினத்தந்தி 13 Jun 2017 3:47 AM IST (Updated: 13 Jun 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை என்பது சுத்தமான பொய் என்று கர்நாடக மேல்–சபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு,

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை என்பது சுத்தமான பொய் என்று கர்நாடக மேல்–சபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பிளாஸ்டிக் அரிசி

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் கணேஷ் கார்னிக், ரகுநாத் மல்காபுரே ஆகியோர் பிளாஸ்டிக் அரிசி குறித்து கேட்ட கேள்விகளுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:–

சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து அரிசி 180 மாதிரிகள், சர்க்கரை 208 மாதிரிகள், முட்டை 8 மாதிரிகள், ராகி 12 மாதிரிகளை எடுத்து அவற்றின் தரம் குறித்து ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிவில், பிளாஸ்டிக் அரிசியோ அல்லது சர்க்கரையோ அவற்றில் கலப்படம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மக்கள் நம்பக்கூடாது

எனவே, பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை, முட்டை விற்பனை செய்வதாக வெளியான தகவல் தவறானது. இது சுத்தமான பொய். சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.40–க்கு கிடைக்கிறது. பிளாஸ்டிக் அரிசி தயாரிக்க கிலோவுக்கு ரூ.200 தேவைப்படுகிறது. அதனால் பிளாஸ்டிக்கில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே, உணவு பொருட்களில் பிளாஸ்டிக் உணவு பொருட்கள் கலப்படமாகி இருப்பதாக வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பக்கூடாது.

இவ்வாறு மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

உண்மைக்கு புறம்பானது

அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடா பேசுகையில், “பிளாஸ்டிக் முட்டை சாப்பிட்ட 4 பேர் கே.ஆர்.பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?“ என்றார். இதற்கு பதிலளித்த மந்திரி ரமேஷ்குமார், இது பற்றி பரிசீலிப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர், “ரே‌ஷன் கடைகளில் விற்கப்படும் அரிசி, சர்க்கரையில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை கலப்படமாகி இருப்பதாக வெளியாகும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நாங்கள் மத்திய உணவு வினியோக வாரியத்திடம் இருந்து நேரடியாக அரிசியை கொள்முதல் செய்து ரே‌ஷன் கடைகளுக்கு வழங்குகிறோம். அதனால் ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படமாகவில்லை“ என்றார்.


Next Story