காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சீபுரம்,
பிரசித்திபெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 6–ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை உற்சவம் கடந்த 8–ந் தேதி நடந்தது.
விழாவின் 7–வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.50 மணியளவில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு காஞ்சீபுரம் தேரடிக்கு வந்தடைந்தார்.
அங்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத, வாண வேடிக்கைகள் முழங்க உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
வடம் பிடித்து இழுத்தனர்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தகவல் மற்றும் செய்தித்தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரடியில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகளான காந்திரோடு, மூங்கில் மண்டபம், தாலுகா அலுவலகம், காமராஜர் தெரு, இரட்டை மண்டபம், நெல்லுக்காரத்தெரு, சங்கரமடம், கங்கைகொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.
அன்னதானம்வழி நெடுகிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானங்கள், நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான விஜயன் செய்து இருந்தார். காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெய்சங்கர், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
முன்னதாக காஞ்சீபுரம் மாவட்ட செய்தி–மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு, மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.