கோவில் இடத்தில் இருந்த வீடு– கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை


கோவில் இடத்தில் இருந்த வீடு– கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 9:19 PM IST)
t-max-icont-min-icon

பார்வதிபுரத்தில் கோவில் இடத்தில் இருந்த வீடு– கடைகளுக்கு வாடகை செலுத்தாததால் அதனை அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான உடமூட்டு தர்மகட்டளைக்கு உட்பட்ட இடங்களில் 65–க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இதில் 2 கடைக்காரர்கள் (சலூன் கடை மற்றும் பேன்சி கடை வைத்திருப்பவர்கள்) மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 5 பேர் மீதும், திருநெல்வேலி அறநிலையத்துறை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 கடைக்காரர்களுக்கும், 3 வீடுகளை சேர்ந்தவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து 2 கடைகள் மற்றும் 3 வீடுகளையும் அகற்றி, அவற்றை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் இணை ஆணையரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறை கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி வாடகை செலுத்தாத 2 கடைகள் மற்றும் 3 வீடுகளை கோவில் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் இணை ஆணையர் வரதராஜன், குமரி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்றனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கடைகள், வீடுகளை கைப்பற்ற முயன்றபோது சம்பந்தபட்ட கடைக்காரர்கள் மற்றும் வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

 ‘சீல்’ வைப்பு

இறுதியில் வீட்டுக்காரர்கள் தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை அகற்றி எடுத்து சென்றனர். ஆனால் கடைக்காரர்கள் பொருட்கள் கடைக்குள்ளேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 வீடுகள் மற்றும் 2 கடைகளை பூட்டி ‘சீல்‘ வைத்து, திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

மேலும் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் முன்புறம் அதற்கான விவரம் அச்சிடப்பட்ட நோட்டீசும் ஒட்டப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story