ஓட்டப்பிடாரம் அருகே, பள்ளிக்கூடம் செல்ல 7 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணிக்கும் மாணவர்கள் அரசு உதவிக்கு கல்வி அதிகாரி ஏற்பாடு


ஓட்டப்பிடாரம் அருகே, பள்ளிக்கூடம் செல்ல 7 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணிக்கும் மாணவர்கள் அரசு உதவிக்கு கல்வி அதிகாரி ஏற்பாடு
x
தினத்தந்தி 14 Jun 2017 1:30 AM IST (Updated: 13 Jun 2017 9:32 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூடத்துக்கு 7 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணித்து சிரமத்திற்கு உள்ளாகி வரும் கிராம மாணவர்களுக்கு அரசு உதவி கிடைக்க நடவடிக்கை

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூடத்துக்கு 7 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணித்து சிரமத்திற்கு உள்ளாகி வரும் கிராம மாணவர்களுக்கு அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உதவி தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட வசதி இல்லை

ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குசாலை செல்லும் வழியில், கீழ மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுப்பிரமணியபுரம் கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் விவசாயிகள். இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. இதனால் அந்த கிராமத்தில் உள்ள 35–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க 7 கிலோ மீட்டர் தூரத்தில் குறுக்குசாலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

ஆட்டோவில் பயணம்

போதிய பஸ் வசதியும் இல்லாததால், தினமும் அவர்கள் ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஆட்டோவிற்கு பணம் கொடுக்க சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் தொடக்க பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

அரசு உதவிக்கு ஏற்பாடு

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு தொடக்க பள்ளிக்கூடம் தொடங்கப்படும் வரை, அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களின் ஆட்டோ செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story