வைப்புத்தொகை செலுத்தாமல் முறைகேடாக பெற்றதால் 11 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


வைப்புத்தொகை செலுத்தாமல் முறைகேடாக பெற்றதால் 11 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:30 AM IST (Updated: 14 Jun 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

வைப்புத்தொகை செலுத்தாமல் முறைகேடாக பெற்றதால் 11 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை காணப்படுகிறது. தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்பொருத்தி குடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும் இதனை கண்காணித்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்து வருவதுடன் குடிநீர் இணைப்பையும் துண்டித்து வருகின்றனர்.

வைப்புத்தொகை

அதேபோல பல வீடுகளில் மாநகராட்சிக்கு வைப்புத்தொகை செலுத்தாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி வைப்புத்தொகை செலுத்தாமல் வீடுகளில் பெறப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் முத்துலட்சமி ஆகியோர் மேற்பார்வையில் அதிகாரிகள் பள்ளியக்கிரகாரம், சருக்கை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 11 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 11 வீடுகளிலும் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் கருத்து

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வீட்டுவரி செலுத்தப்படாத வீடுகளில் மாநகராட்சிக்கு வைப்புத்தொகை செலுத்தாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளதாக புகார் வந்தது. ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்பையும் துண்டித்து வருகிறோம். குடிநீர் இணைப்பு பெற வைப்புத்தொகை ரூ.4,125 செலுத்த வேண்டும். அந்த தொகையை செலுத்தாமல் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் விரைவாக வைப்புத்தொகை செலுத்த வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் அபராதம் விதிக்கப்படும். மேலும் குடிநீர் இணைப்பு இனிமேல் பெற முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 1 மற்றும் 3-வது வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதேபோல் எல்லா வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்படும் என்றனர்.


Next Story