டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஐ.டி.ஐ மாணவ–மாணவிகள் கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஐ.டி.ஐ மாணவ–மாணவிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 Jun 2017 9:39 PM GMT (Updated: 13 Jun 2017 9:38 PM GMT)

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஐ.டி.ஐ மாணவ–மாணவிகள் கலெக்டரிடம் மனு

ஈரோடு,

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஐ.டி.ஐ. மாணவ –மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஐ.டி.ஐ. மாணவ –மாணவிகள்

ஈரோடு –சென்னிமலை ரோட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300 பெண்கள் உள்பட 800–க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐ.டி.ஐ. மாணவ –மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் தங்களது வகுப்புகளை புறக்கணித்து விட்டு நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

பல்வேறு தொல்லை

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோடு –சென்னிமலை ரோட்டில் நாங்கள் படிக்கும் ஐ.டி.ஐ.க்கு எதிரே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பார் வசதி கிடையாது. அதனால் அங்கு குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு நேராக ஐ.டி.ஐ. வளாகத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். பின்னர் அங்கு சாவகாசமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.

மதுபோதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை குடிமகன்கள் அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் வளாக பகுதியில் நடமாட முடியவில்லை. மேலும் பயிற்சி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை ரோட்டில் பஸ்சுக்காக காத்து இருக்கும் போது குடிமகன்களால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது.

டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும்

அவர்கள் குடித்துவிட்டு வந்து எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். மேலும் கிண்டலும் செய்கிறார்கள். இதனால் ஐ.டி.ஐ.க்கு வரவே அச்சமாக உள்ளது. எனவே ஈரோடு –சென்னிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தினமும் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரை எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஐ.டி.ஐ. மாணவ –மாணவிகள் கூறி இருந்தார்கள்.


Next Story