கல்வராயன்மலை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி


கல்வராயன்மலை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Jun 2017 3:50 AM IST (Updated: 14 Jun 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி போலீசார் தாமதமாக வந்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் தாமதமாக வந்ததால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

டிராக்டர்–மோட்டார் சைக்கிள் மோதல்

கல்வராயன்மலை அருகே உள்ள வெள்ளரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் பாக்கியராஜ்(வயது 27), தொழிலாளி. இவர் நேற்று அதிகாலையில் தனது தந்தை குப்பனுடன்(53) ஒரு மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி சென்றார்.

காலை 5.30 மணியளவில் கரியாலூர்–வெள்ளிமலை சாலையில் படகுத்துறை அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டர் மீது பாக்கியராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். குப்பன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

சாலை மறியல்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குப்பனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து பற்றி கரியாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலை 10 மணியாகியும் இறந்த பாக்கியராஜின் உடலை கைப்பற்ற போலீசார் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளிமலை–கரியாலூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும், டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து விபத்தில் இறந்த பாக்கியராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான கரியாலூரை சேர்ந்த தீர்த்தனகிரி மகன் சுரேஷ்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story