ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்கக் கோரி வழக்கு
ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்கக் கோரி வழக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ரெயில்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி நீக்கப்பட்டது. தனிப்பெட்டி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் ரெயில்களில் பயணிக்க முடியவில்லை.
எனவே, இந்த ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவும், அவர்களது உடமைகளை வைத்துக்கொள்ளவும் வசதியாக கூடுதலாக ஒரு பெட்டி இணைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது ரெயில்வே தரப்பு வக்கீல் ஆஜராகி, "மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
விசாரணை முடிவில், இந்த மனு குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர், ரெயில்வே கோட்ட மூத்த மேலாளர், மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 12–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.