தென்திருப்பேரை அருகே, சீராக தூர்வாரக்கோரி கடம்பா குளத்தை கிராம மக்கள் முற்றுகை போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்


தென்திருப்பேரை அருகே, சீராக தூர்வாரக்கோரி கடம்பா குளத்தை கிராம மக்கள் முற்றுகை போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்
x
தினத்தந்தி 15 Jun 2017 2:00 AM IST (Updated: 14 Jun 2017 6:01 PM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை அருகே கடம்பா குளத்தை சீராக தூர்வார கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை அருகே கடம்பா குளத்தை சீராக தூர்வார கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு சமரசம் செய்ததை தொடர்ந்து முற்றுகை கைவிடப்பட்டது.

வண்டல் மண்


ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் முதன்மையானது தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம். ‘கடலில் பாதி கடம்பா குளம்‘ என்று அழைக்கப்படும் இந்த குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தால்தான்‘ திருச்செந்தூர் வரையிலும் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும்.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டன. இதையடுத்து குளங்களை தூர்வாரும் வகையில், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, குளங்களில் வண்டல் மண்ணை அள்ளி வருகின்றனர்.

பொதுமக்கள் முற்றுகை

அதன்படி கடம்பாகுளத்தில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ளி தூர்வாரி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிலர் 10–க்கு மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் கடம்பா குளத்தில் ஆங்காங்கே வண்டல் மண்ணை அள்ளி குவித்து வைத்து உள்ளனர். சிலர் அங்குள்ள ஆற்று மணலை மட்டும் அள்ளி செல்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் நேற்று காலையில் கடம்பா குளத்தை முற்றுகையிட்டனர். உடனே ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் பால் ஐசக், பேச்சி, சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாய்க்காலை தூர்வார...

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடம்பா குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் முழுவதும் தூர்ந்து விட்டது. எனவே முதலில் அதனை தூர்வார வேண்டும். பின்னர் குளம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் ஒரே ஆழத்தில் சீராக தூர்வாரி வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, அதன்படி குளத்தை முறையாக தூர்வார வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் அதன்படி குளத்தை முறையாக தூர்வாரும் பணி தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story