பதவி உயர்வு அரசாணை நிறுத்தி வைப்பு: நாமக்கல்லில் கால்நடை மருத்துவர்கள் போராட்டம்
பதவி உயர்வு அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கால்நடை மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
பதவி உயர்வுக்கான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து நேற்று தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கால்நடை மருத்துவர்கள் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் 104 உதவி கால்நடை டாக்டர்கள் மற்றும் 8 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிரிராஜன், கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:–
பதவி உயர்வு ஆணை நிறுத்திவைப்புகால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் பதவி உயர்வே பெறாமல் ஓய்வு பெறும் நிலை உள்ளது. கால்நடை மருத்துவ பணிகளோடு மக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் விலையில்லா கால்நடைகள் வழங்குதல், வைக்கோல் வினியோகம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் நாங்களே செயல்படுத்தி வருகிறோம்.
எங்களின் இந்த பங்களிப்பினை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்–அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் 28–ந் தேதி 3 கட்ட பதவி உயர்வினை உறுதி செய்யும் பதவி நிலை விருத்தி ஆணையை பிறப்பித்தார். இதற்கென பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 49–ஐ தற்போது நிறுத்தி வைக்க நிதித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே தமிழக முதல்–அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணை எண் 49–ஐ செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாற்று ஏற்பாடுடாக்டர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக கால்நடைகளுக்கு சிகிச்சை பணிகள் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.