குளப்பத்துகுளத்தில் மண் எடுக்க அனுமதி: சாலை சேதமடைந்ததால் 50 டிராக்டர்கள் சிறைபிடிப்பு


குளப்பத்துகுளத்தில் மண் எடுக்க அனுமதி: சாலை சேதமடைந்ததால் 50 டிராக்டர்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 3:30 AM IST (Updated: 15 Jun 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

குளப்பத்துகுளத்தில் மண் எடுக்க அனுமதி: சாலை சேதமடைந்ததால் 50 டிராக்டர்கள் சிறைபிடிப்பு

ஆனைமலை,

குளப்பத்துக்குளத்திலர் மண் எடுத்து செல்லும் வாகனங்களால் சாலை சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50 டிராக்டர்களை சிறைபிடித்தனர்.

மண் எடுக்க அனுமதி

ஆனைமலையை அடுத்த சுள்ளிமேட்டுபதி பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் குளப்பத்து குளம் உள்ளது. இந்த குளத்தில் வண்டல் மண் எடுக்க கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி வழங்கியது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் தினமும் 200 டிராக்டர்கள் மற்றும் 50 டிப்பர் லாரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருவதால் ஆனைமலை சுள்ளிமேட்டுபதி சாலை சேதமடைந்தது. இதற்கிடையில் மழை பெய்ததால் உழுது போட்ட வயல் போல் சாலை காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.

குளப்பத்துக்குளத்தில் மண் எடுத்து செல்லும் டிராக்டர் மற்றும் லாரிகளால் சாலை சேதம் அடைந்ததாக கூறி ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை வெப்பரை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள், சாலையை சீரமைக்காமல் குளத்தில் வண்டல் மண் எடுக்க கூடாது என்று கூறி அந்த வழியாக வந்த 50–க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் பொதுப்பணித் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்த சாலையில் உடனடியாக மண் கொட்டி சரி செய்ய பொதுப்பணித் துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் டிராக்டர்களை விடுவித்தனர்.

இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது:–

குளப்பத்துகுளத்தில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கிஉள்ளது. அதிகளவு வாகனங்கள் வண்டல் மண் எடுத்து வருவதாலும், மழை பெய்துவருவதாலும் சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் முதல் கட்டமாக சாலையில் பாறை மண் கொட்டப்பட்டு உள்ளது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக குளத்தில் வண்டல் மண் எடுப்பது ஒரு நாள்மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஅவர்கள் கூறினர்.


Next Story