மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 245 பேர் கைது


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 245 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 4:00 AM IST (Updated: 15 Jun 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 245 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் வாங்கியது தொடர்பாக பேச முயன்றதால் தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், கைதான மு.க.ஸ்டாலின் மற்றும் பிற எம்.எல்.ஏ.க்களை விடுதலை செய்யக்கோரியும் கோவையில் தி.மு.க. சார்பில் சாலைமறியல் நடந்தது. வடகோவை மேம்பாலம் அருகே கோவை மாநகர் வடக்குமாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் பஸ்நிலையம்

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, துணை செயலாளர்கள் ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், மதனகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் வீரகோபால், மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் செல்வராஜ், கோவை லோகு, பூபாலன், புதூர் மணி, வி.பி.செல்வராஜ் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதுபோன்று கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் தி.மு.க.வினர் சிங்காநல்லூர் பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட துணை செயலாளர் குமரேசன், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, விவசாய அணியை சேர்ந்த இளஞ்சேரன் உள்பட 55 பேரை கைது செய்தனர்.

சுந்தராபுரம்

கோவை பீளமேட்டில் உள்ள அவினாசி ரோட்டில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திராவிடமணி தலைமையில் மறியல் நடந்தது. இதில் பகுதி செயலாளர் பி.டி.முருகேசன், வக்கீல் விஜயசேகர், மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.

அதுபோன்று மாடசாமி தலைமையில் பீளமேடு புதூரில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அந்த கட்சியை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி பிரபாகரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொத்தத்தில் கோவை மாநகர பகுதியில் 5 இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 245 பேரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story