டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
சாமளாபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் அருகே காளிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கார்டுதிருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் சாமளாபுரம் அருகே காளிபாளையத்தில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்திலும், ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இருப்பினும் டாஸ்மாக் கடை வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த சிலர் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைக்கும் படி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமியை சந்தித்து ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டையையும் ஒப்படைக்க முயன்றனர். மேலும், கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
போராட்டம் நடத்தப்படும்எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க ஊர் பொதுமக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதையும் மீறி எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை. இதனால் எங்கள் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி ரேஷன் கார்டையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் ஒப்படைக்கும் முயற்சியை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும், மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளும் அவர்கள் ஒப்படைக்காமல் திரும்பி சென்றனர். இதற்கிடையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.