மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேர் கைது


மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 3:45 AM IST (Updated: 15 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேர் கைது

சாலை மறியல்

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரியார் நகர் பகுதியில் குவிந்தனர். அங்கிருந்து மதியம் 2.30 மணி அளவில் ஊர்வலமாக புறப்பட்டு ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டுக்கு வந்தனர்.

மு.க.ஸ்டாலினை விடுதலை செய் என்ற கோ‌ஷத்துடன் வந்த அவர்கள் திடீரென்று நடு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

150 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு நேதாஜி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மொத்தம் 14 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக ஈ.வி.என். ரோட்டில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் பெருந்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 21 பேரும், சத்தியமங்கலத்தில் 22 பேரும், அந்தியூரில் 95 பேரும், பவானியில் 68 பேரும், கோபியில் 60 பேரும், அம்மாபேட்டையில் 50 பேரும், சென்னிமலையில் 20 பேரும் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.


Next Story