மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 19 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 19 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் 604 பேர் கைது
விழுப்புரம்,
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 19 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 604 பேர் கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைதுதமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று கேள்வி நேரத்திற்கு பிறகு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசியதாக கூறி வெளியான வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் அவை காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை கண்டித்து சட்டசபை வளாகம் முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.
சாலை மறியல்இதனை கண்டித்தும், மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரத்தில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் வந்தனர். தொடர்ந்து, அங்கு அவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினார்கள். இதில் நகர தலைவர் சக்கரை, மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டுராஜா, மும்மூர்த்தி, நகர துணை செயலாளர் புருஷோத்தமன், பொறியாளர் அணி அமைப்பாளர் இளங்கோ, மாணவர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்ட பிரதிநிதி சக்கரபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்– புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜா, இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் செஞ்சியில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், நகர செயலாளர் காஜாநஜீர் முன்னிலையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட விவசாய அணி அரங்க ஏழுமலை, மாவட்ட வக்கீல் அணி மணிவண்ணன், பொறியாளர் அணி மொக்தியார், வர்த்தகர் அணி மோகன், நிர்வாகிகள் ரவி, குணசேகரன்,, சோடா பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டார்மங்கலத்தில் தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, நிர்வாகிகள் ஸ்டாலின், இளம்வழுதி, கண்ணன், தமிழரசன், அன்பு செழியன், பாண்டியன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டைஇதேபோல் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரும், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரும், விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் நயினாமுகமது தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தெற்கு மாவட்ட பொருளாளர் கென்னடி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 24 பேரும், அவலூர்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்மேலும் திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் வக்கீல் தங்கம் தலைமையில் மறியில் ஈடுபட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குணா, ஒன்றிய துணை செயலாளர் சங்கர், மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் வெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி மலையரசன், முன்னாள் கவுன்சிலர்கள் தங்கராஜ், கோவிந்த், கலைவாணிசக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆதிநாராயணமூர்த்தி, தொ.மு.ச நிர்வாகி டி.கே.சரவணன், வார் செயலாளர் பிரஸ் துரை உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில், மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதிகள் எத்திராஜ், மலையரசன், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், ஆரோவில்லை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை அருகில் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், கோட்டக்குப்பத்தில் நகர செயலாளர் சண்முகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், மரக்காணம் அனுமந்தையில் ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேரும், கிளியனூர் கொஞ்சிமங்கலம் சாலையில் ஒன்றிய செயலாளர் ராஜி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், பகண்டை கூட்டுசாலை அருகில் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும் கைது செய்யப்பட்டனர்.
604 பேர் கைதுவிழுப்புரம் மாவட்டத்தில் 19 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 604 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.