தேனி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 423 பேர் கைது


தேனி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 423 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 3:30 AM IST (Updated: 15 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 423 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

சட்டசபை கூட்டத்தின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி வெளியான வீடியோ குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேச முயன்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடத்தப்பட்டது. அதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தேனியில் நேருசிலை அருகே தி.மு.க. நகர செயலாளர் இலங்கேஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் கோட்டூரில் மறியலில் ஈடுபட்ட விவசாய அணி நிர்வாகிகள் 7 பேரும், ஆண்டிப்பட்டியில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போடி

மேலும் போடியில் தேவர் சிலை அருகே தி.மு.க. நகர செயலர் செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்தனர். இதே போல் வீரபாண்டியில் ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 32 பேரும், சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சாலையில், நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடத்திய 18 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் கம்பம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 41 பேரும், ஓடைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 12 பேரும், கம்பத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 58 பேரும், கூடலூர் பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் லோகன்துரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடமலைக்குண்டு

மேலும் கடமலைக்குண்டு பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலர் சுப்பிரமணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடும்பாறையில் கிளைச்செயலாளர் மச்சக்காளை தலைமையில் மறியல் போராட்டம் நடத்திய 13 பேரும், பெரியகுளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த மறியலில் 10 பேரும், விவசாய அணி மாநில அமைப்பாளர் மூக்கையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story