திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 3:15 AM IST (Updated: 15 Jun 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

புலையன் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்த வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து சிறிது தூரத்தில் தள்ளி சென்று, கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை

மேலும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் அஜாய்கோஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாண்டி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம், பழங்குடியின புலையன் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புலையன் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும், சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் மாநில தலைவர் டில்லிபாபு கூறுகையில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் புலையன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1976–ம் ஆண்டு வரை பழங்குடியினர் பட்டியலில் இருந்தனர். அதன்பின்னர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் அரசு சலுகைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கான ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும், என்றார்.


Next Story