‘ஆசிரியர்களாக இருப்பதை விட கல்வியாளர்களாக இருப்பது கடினம்’


‘ஆசிரியர்களாக இருப்பதை விட கல்வியாளர்களாக இருப்பது கடினம்’
x
தினத்தந்தி 15 Jun 2017 3:45 AM IST (Updated: 15 Jun 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

‘ஆசிரியர்களாக இருப்பதை விட கல்வியாளர்களாக இருப்பது கடினம்’ அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா பேச்சு

காரைக்குடி

ஆசிரியர்களாக இருப்பதை விட கல்வியாளர்களாக இருப்பது கடினம் என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை வேந்தர் சுப்பையா கூறினார்.

கருத்து பட்டறை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறை, சென்னை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை சார்பில் ‘தரமான ஆராய்ச்சிக்கு தேவையான கருத்துரு தயாரித்தல்‘ என்ற தலைப்பில் மாநில அளவிலான 3 நாள் கருத்து பட்டறையின் தொடக்க விழா மைய நூலக கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. கருத்து பட்டறையை தொடங்கி வைத்து அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா கூறியதாவது:–

உயர்கல்வி துறையில் ஆசிரியர் என்பவர் கற்பிப்பவராக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களின் நடத்தையையும், மனதையும் அறிய வேண்டுமானால் ஒரு ஆசிரியர் தர மற்றும் பண்பறி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். ஆசிரியர்கள், நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை ஒருங்கே பெற்றிருந்தால் அவர்கள் சார்ந்த பள்ளி வெகுவாக முன்னேறும். ஆசிரியர்களாக இருப்பதைவிட கல்வியாளராக இருப்பது கடினம். எனவே ஆசிரியர்கள் கல்வியாளராக திகழ முயற்சிக்க வேண்டும்.

தரமான ஆராய்ச்சி

தரமான ஆராய்ச்சி என்பது அறிவுப்பூர்வமான ஒரு தேடலாகும். குறிப்பாக ஒரு புது பார்வையோடு மனிதனுடைய நடத்தையையும், செயல்பாட்டையும் பற்றி ஆய்வு மேற்கொள்வதாகும். கூர்ந்த பார்வையோடு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து, பின்னர் அறிவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுவே ஒரு தரமான ஆராய்ச்சியாக கருதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் காளையார்கோவில் மாவட்டக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தலைவர் திருஞானசம்பந்தர் சிறப்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் புல முதன்மையர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்லத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த இன்பராஜ் கருத்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 100–க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறைத்தலைவர் கலையரசன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார்.


Next Story