அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது பற்றி 29 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் நாளை ஆலோசனை


அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது பற்றி 29 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது பற்றி 29 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக டெல்லிக்கு புறப்படும் முன் அய்யாக்கண்ணு கூறினார்.

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந்தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

டெல்லியில் நாளை ஆலோசனை

இந்நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் திருச்சியில் இருந்து நேற்று காலை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து அவர்கள் ரெயிலில் டெல்லிக்கு செல்கிறார்கள்.

முன்னதாக திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். பிரதமர் மோடி எங்களை சந்திக்க மறுத்ததால் டெல்லி ராஜபாதையில் 3 விவசாயிகள் நிர்வாணமாக ஓடினார்கள். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே மீண்டும் டெல்லிக்கு செல்கிறோம். ஜூன் 16–ந்தேதி (நாளை) டெல்லியில் 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகிய எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை பிரதமர் வீட்டு முன் நடத்துவதா? அல்லது அலுவலகம் முன் நடத்துவதா? என முடிவு செய்யப்படும். மேலும் 500 விவசாயிகளை நிர்வாணமாக ஓட விடும் போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story