மு.க. ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி தி.மு.க. வினர் சாலை மறியல் போராட்டம்
மு.க. ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் தி.மு.க. வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
தமிழக சட்டசபை நேற்று கூடியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பண பேரம் தொடர்பாக தி.மு.க.உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதனை கண்டித்து சட்டசபை வளாகம் முன் மறியல் போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கோரியும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் நேற்று தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் சிறிது நேரம் வெளியே வர முடியவில்லை. மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, கண்ணன், மோகன்தாஸ், பாலமுருகன் உள்பட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், ரங்கா, துர்கா தேவி, லீலா வேலு உள்பட முன்னாள் கவுன்சிலர்கள், ராமதாஸ் உள்பட வட்ட செயலாளர்கள் 120 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
மேலும் 30 பேர்திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின்ரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்து செல்வம் தலைமையில் தி.மு.க. வினர் சாலை மறியல் செய்தனர். இதனால் திருச்சி– மதுரை மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் முத்து செல்வம் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம்
இதேபோல சமயபுரம் கடை வீதியில் நகர தி.மு.க செயலாளர் துரை ராஜசேகர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரத்தில் திருச்சி மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜ்மோகன் தலைமையில் மறியல் செய்தனர்.இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் தி.மு.கவினர் 50 பேர் பஸ் மறியல் செய்தனர். உடனடியாக அவர்களை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர்.
லால்குடி
லால்குடியில் நாலுரோட்டில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் துரைமாணிக்கம் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
புள்ளம்பாடி ஒன்றிய தி.மு.க. சார்பில் புள்ளம்பாடியில் உள்ள திருச்சி–சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நகர தி.மு.க. செயலாளர்கள் முத்துகுமார், பால்துரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து கல்லக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.