பதவிஉயர்வை மீண்டும் வழங்ககோரி கால்நடை உதவி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வினை மீண்டும் வழங்க கோரி கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
கால்நடைத்துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பதவி உயர்வு அல்லாமல் ஒரே பதவியல் பணியாற்றும் நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 28–ந் தேதி கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின் கீழ் தமிழகத்தில் உள்ள 700 பேர் முதல்கட்டமாக மூத்த மருத்துவர், முதன்மை மருத்துவர் என் பதவி உயர்வு பெற்று அந்தந்த இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 31–ந்தேதி தமிழக அரசின் நிதித்துறையின் சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வு அரசாணையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக அரசு வழங்கிய பதவி உயர்வு கிடைக்காமல் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஆயிரத்து 900 உதவி மருத்துவர்கள் மற்றும் 700 மருத்துவ அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசாணையை மீண்டும் செயல்படுத்தக்கோரி ஒருநாள் தற்செயல்விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டம்இதன்படி ராமநாதபுரத்தில் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர். மேலும் தமிழ்நாடு அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பரமக்குடி அழகிரிசாமி, ராமநாதபுரம் பிரபாகரன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 4 கால்நடை ஆஸ்பத்திரிகள் மற்றும் 55 கால்நடை மருந்தகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களில் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த விவசாயிகள் உதவி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஏமாற்றத்துடன் கால்நடைகளுடன் திரும்பிச் சென்றனர்.