திருவாடானையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை


திருவாடானையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 Jun 2017 3:30 AM IST (Updated: 15 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பெண்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 தொண்டி,

திருவாடானை யூனியன் மருதாந்தை கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 100 நாள் வேலைக்கு செல்வதால் காலை 8 மணிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு மேல் தான் வீடு திரும்புகின்றனர். இதனால் தண்ணீர் வரும் நேரத்தில் குடிநீரை பிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுது.

அதனை தொடர்ந்து இந்த கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து மருதாந்தை கிராமத்தை சேர்ந்த மகளிர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:–

அனைத்து குடும்பத்தினரும் 100 நாள் வேலைக்கு செல்வதால் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே வரும் குடிநீரை கூட பிடிக்க முடியவில்லை. மேலும் கழிப்பறை கட்டினால் தான் 100 நாள் வேலைக்கு சேர்த்து கொள்வோம் என எங்கள் ஊராட்சி களப்பணியாளர் மிரட்டி வருகிறார். எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய் மராமத்து செய்ய ரூ 7 லட்சத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் பாதி வேலை கூட வேலை நடைபெறவில்லை பணம் தீர்ந்து விட்டது என கூறி அதிகாரிகள் எங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த நிலையில் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் மாலை 5 மணி வரை பணி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துவதால் பல பெண்கள் மயங்கி பணித்தளத்தில் விழுந்து விடும் சம்பவங்களும், பலர் வீட்டில் சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற பல அசவுகரியங்கள் ஏற்படுகிறது. எனவே தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் நடைமுறைப்படுத்தும் நேரத்தை குறைத்து பழைய நடைமுறையின் கீழ் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் 100நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வரும் பலருக்கு சம்பளம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக வித்தியாசாமாக வழங்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன் 100நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story