ஆட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி பிடித்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி பிடித்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் ஆட்களை ஏற்றி சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த லாரியில் பயணம் செய்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை,

குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைராஜ் மற்றும் போலீசார் நேற்று குளித்தலை சுங்கவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து குளித்தலை சுங்கவாயில் பகுதி வழியாக குளித்தலை நகரப்பகுதிக்குள் லாரி ஒன்று செல்ல முயன்றது. அந்த லாரியின் பின்பகுதியில் 75–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வந்தனர்.

இதை பார்த்த போக்குவரத்து போலீசார் லாரியை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். போலீசார் மறிப்பதை கண்டதும் லாரியின் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தங்களது வாகனத்தில் அந்த லாரியை பின்தொடர்ந்தனர்.

வாக்குவாதம்

குளித்தலை பஸ் நிலையம் அருகே அந்த லாரியை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து நிறுத்தினர். லாரியில் பயணம் செய்தவர்களை இறங்க கூறினர். லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததற்காக லாரியின் டிரைவர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது லாரியில் வந்த ஆண்கள், பெண்கள் தாங்கள் திருச்சி மாவட்டம் வீரமணிப்பட்டியில் இருந்து திருச்சி கருமண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு செல்வதாகவும், தங்கள் பகுதியில் பஸ் வசதி இல்லாத காரணத்தால் லாரியில் வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் லாரியை விடுவிக்க கோரி போக்குவரத்து போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லாரியை விடுவிக்க முடியாது என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறினர். மேலும் அனைவரையும் பஸ்சில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் உடனடியாக அந்த இடத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

பஸ் வசதி ஏற்பாடு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். லாரியை விடுவிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தாங்கள் திருமணத்திற்கு செல்வதற்கு வழியில்லை என்று லாரியில் வந்தவர்கள் கூறினர். இந்த நிலையில் அங்கு வந்த குளித்தலை போக்குவரத்து பணிமனை மேலாளர் ஜெயசந்திரனுடன் போலீசார் ஆலோசனை நடத்தி பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அரசு பஸ் குளித்தலையில் இருந்து திருச்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் திருச்சிக்கு அனைவரும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் குளித்தலை பஸ்நிலையம் அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story