தி.மு.க.வினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 199 பேர் கைதாகி விடுதலை


தி.மு.க.வினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 199 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 15 Jun 2017 4:15 AM IST (Updated: 15 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 199 பேர் கைதாகி விடுதலையானார்கள்.

கரூர்,

தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் தி.மு.க.வினர் நேற்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் பொருளாளர் கருப்பண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெள்ளாளப்பட்டி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.

கோ‌ஷம்

பஸ் நிலையம் சிக்னல் கம்பம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், சரவணன் எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். இதில் 8 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ராயனூர் அருகே ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

199 பேர் கைதாகி விடுதலை

இதேபோல சின்னதாராபுரத்தில் க.பமரத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலையில் நகர செயலாளர் மாணிக்கம் தலைமை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாயனூர், வேலாயுதம்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். உப்பிடமங்கலம், வெங்கமேட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 16 பெண்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story