மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:30 AM IST (Updated: 15 Jun 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்பட 170-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் நடைபெற்றது குறித்து சபாநாயகரிடம் பேச நேரம் ஒதுக்குவதற்கு கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுத்தார். இதையடுத்து சபையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தனர். இதனை கண்டித்து

திருவாரூர் பஸ்நிலையம் ரவுண்டாவில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்தி, நகர செயலாளர் வாரைபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் புலிவலம்தேவா, நகரசபை முன்னாள் துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.

நன்னிலம்

இதேபோல மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நன்னிலம் ஒன்றியத்தில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் காக்காகோட்டூரில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல் தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆண்டிபந்தலில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் தலைமையிலும், கங்களாஞ்சேரியில் ஏராளமான தி.மு.க.வினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சாலைமறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை நன்னிலம் போலீசார் கைது செய்தனர். இந்த சாலைமறியலால் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story